புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமாரை போல் சதீஷ்குமாரும் தலைமறைவு! தனிப்படைகள் வலைவீச்சு!
சென்னை: நாமக்கல் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் தலைமறைவான நிலையில் அவரை பிடிக்க தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள். சதீஷ்குமாரின் முன்ஜாமீன் மனுவை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் அவர் தலைமறைவானதாக சொல்லப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய், நாமக்கல், கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் நாமக்கல்லில் தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக, தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான் அவர் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் சதீஷ்குமார்,"நான் எந்த குற்றமும் செய்யவில்லை. அரசியல் காரணங்களுக்காக என்னையும் வழக்கில் சேர்த்துவிட்டுள்ளனர். சம்பவ இடத்தில் நான் இருந்தேன் என்பதற்காகவே என் மீது வழக்கு போட்டனர்.
போலீஸார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரவும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படவும் தயாராக இருக்கிறேன். எனக்கு முன்ஜாமீன் தாருங்கள்" என அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த நிலையில் அந்த மனு மீது நேற்று விசாரணை நடத்தப்பட்டது.
மனுவை நீதிபதி செந்தில்குமார் விசாரித்தார். அப்போது போலீஸார், அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுவதாக செய்வதாக கூறி பிரசாரத்துக்கு மனுதாரர் அனுமதி பெற்றார். அவரது கட்சியினரின் செயல்பாடுகளால் ரூ.5 லட்சம் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பொதுச் சொத்துகளும் நாசப்படுத்தப்பட்டு உள்ளன . இது தொடர்பாக மனுதாரர் மீது மேலும் 8 வழக்குகள் பதியப்பட்டுள்ளது என வாதங்களை வைத்தனர்.
சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு சதீஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நீதிபதி குறுக்கிட்டு, உங்கள் கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் எனக்கு எதுவும் தெரியாது என எப்படி சொல்ல முடியும். சொந்த கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா, பொறுப்புடன் செயல்பட்டிருக்க வேண்டாமா என கடும் கண்டனங்களை தெரிவித்து அவரது முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார்.
தான் எப்படியும் கைது செய்யப்படுவோம் என அறிந்த நிலையில் சதீஷ்குமார் தலைமறைவானார். இதையடுத்து அவரை பிடிக்க காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள். புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், ஆகியோரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களையும் தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications