"திருநங்கைனு அழகான பெயர் சூட்டியவர் கலைஞர் ஐயா".. பிக்பாஸில் கண்ணீர் விட்டு நெகிழ்ந்த நமிதா
சென்னை: திருநங்கை என்ற அழகான பெயரை சூட்டியவர் கருணாநிதி என பிக்பாஸ் நிகழ்ச்சியில் உருக்கமாக நமிதா மாரிமுத்து பேசியிருந்தார்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதல் முறையாக திருநங்கை போட்டியாளராக நமிதா மாரிமுத்து கலந்து கொண்டுள்ளார். இவர் மாடல், பல்வேறு அழகி பட்டங்களை பெற்றவர். இந்த நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதைகள் குறித்து கூற வேண்டும்.
அந்த வகையில் முதலில் இசைவாணி, சின்னப்பொண்ணு ஆகியோர் கூறினர். இதில் இசைவாணியின் கதையை கேட்ட ரசிகர்கள் அவருக்கான மனம் வேதனையடைந்தனர். இதையடுத்து நமிதா மாரிமுத்து தான் கடந்து வந்த பாதை குறித்து கூறினார்.

கண்ணீர் கடல்
இந்த எபிசோடை நமிதா அனைவரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்திவிட்டார். தனது தாய் தன்னை ஏற்றுக் கொண்டு விட்டார் என சொல்ல ஆரம்பித்த நமிதா, அந்த நிகழ்ச்சி முழுவதும் அழுது கொண்டே இருந்தார். யாருக்காவது ஏதேனும் குறையிருந்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என எனக்கு அம்மா சொல்லிக் கொடுத்து வளர்த்தார். ஆனால் என் உடலில் உள்ள குறையை அவர் ஏற்கவில்லை.

உடல் மாற்றங்கள்
எனது உடலில் ஏற்பட்ட மாற்றங்களுக்குக்கேற்ப நான் எனது நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொண்டேன். இதனால் என்னை பெற்றோர் அடித்ததிலிருந்து எனக்கு உடம்பே மருத்து போய்விட்டது. என்னை விஷ ஊசி போட்டு கொலை செய்துவிடுவதாகவும் என்னை பெற்றோர் மிரட்டினர். 14 அல்லது 15 வயதில் திருநங்கைகள் வீட்டை விட்டு வெளியேறிவிடுவதால் எத்தனை கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் தெரியுமா?

பாலியல் தொழில்
திருநங்கைகள் பிச்சையெடுக்கிறார்கள், பாலியல் தொழில் செய்கிறார்கள் என குற்றம்சாட்டுகிறீர்கள். ஆனால் அதற்கு காரணம் யார் பெற்றோர்தானே!. எங்களை 15 வயதில் வீட்டை விட்டு துரத்திவிடுகிறார்கள். இதனால் படிப்பை இழக்கும் நாங்கள் வயிற்று பிழைப்புக்கு என்ன செய்வது? எங்களை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. எங்களை மாறுங்கள் மாறுங்கள் என சொல்லும் நீங்கள்தான் மாற வேண்டும்.

முதல்முறையாக
ஆனால் என்னை தனது தந்தை மட்டும் புரிந்து கொண்டார். என்னை நினைத்து வருந்தி வருந்தி அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. எங்களை இந்த சமூகத்தில் பல்வேறு ஏளன பெயர்களை வைத்து அழைத்து வந்த நிலையில் முதல்முறையாக கருணாநிதிதான் திருநங்கைகள் என்ற அழகான பெயரை எங்களுக்கு சூட்டினார்.

திருநங்கைகளுக்கான நல வாரியம்
அது மட்டுமல்ல திருநங்கைகளுக்கான நல வாரியம் அமைக்கும் முடிவைும் எடுத்தார். எங்களுக்கு நல வாரியம் அமைத்ததன் மூலம் வாக்கு அளிக்கும் உரிமையையும் பெற்று தந்தார். சமூகத்தில் எங்களுக்கென மரியாதையும் கிடைத்தது. கருணாநிதி செய்த நல்ல பணிகளுக்காக அனைவரும் எப்போதும் அவருக்கு நன்றியுடன் இருப்போம் என நமீதா அழுது கொண்டே தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications