அமித்ஷா சொன்னார் நாங்கள் சேர்ந்தோம்.. டெல்லியில் நடந்தது என்ன.. புட்டு புட்டு வைத்த டிடிவி தினகரன்
செங்கல்பட்டு: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுக - பாஜக தீவிரம் காட்டி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராங்கத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதில் அதிமுக - பாஜக கூட்டணி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு திமுகவை கடுமையாக விமர்சித்தார்கள். இதன் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டிடிவி தினகரன், அமித்ஷாவால் தான் இந்தக் கூட்டணி உருவாகியுள்ளது என்று வெளிப்படையாக கூறி எடப்பாடியுடனான உறவு குறித்தும் விளக்கியுள்ளார்.
மதுராந்தகம் பொதுக் கூட்டத்திற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக அன்புமணி ராமதாஸ், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அமித்ஷா தான் காரணம்
அப்போது எடப்பாடி பழனிசாமி நீங்கள் பேசுங்க என்று டிடிவி தினகரனை கேட்டு கொள்ள அவர் பேசினார். அப்போது டிடிவி தினகரன், "திமுக 2016-2021 ஆம் ஆண்டு எதிர்க்கட்சியாக இருந்தது. அப்போது எதற்காக அவர்கள் போராட்டம் நடத்தினார்கள் என்று உங்களுக்கு தெரியும். 2021 தேர்தல் அறிக்கையில் அவர்கள் என்ன சொல்லியிருந்தார்கள் என்பதும் தெரியும். அதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.
அதை மக்களிடம் கொண்டு செல்வதுதான் எங்கள் பணி. நாங்கள் மனஸ்தாபத்தால் பிரிந்தது உண்மை. இது எங்கள் குடும்ப பிரச்சனை. மனஸ்தாபம் நீங்கிவிட்டது. எங்கள் ஒற்றுமைக்கு அமித்ஷாவே காரணம். 2021 ஆம் ஆண்டே எங்களை இணைக்க அமித்ஷா விரும்பினார். அப்போது அது நடைபெறவில்லை. அந்த முயற்சி 2026 ஆம் ஆண்டில் நடந்துவிட்டது. பழனிசாமியும், நீங்களும் ஒற்றுமையாக இருந்து மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று அமித்ஷா கேட்டார்.
நாங்கள் அண்ணன் தம்பி
அதற்கு ஒப்புதல் அளித்த பிறகு தான் இந்த கூட்டணி உருவாக்கியுள்ளது. நாங்கள் பார்த்தவுடனே சேர்ந்துவிட்டோம். இதில் அச்சுறுத்தலோ, அழுத்தமோ யாருக்கும் இல்லை. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அண்ணன் - தம்பியாக இருந்தோம். அதேபோல தற்போதும் இணைந்துவிட்டோம்.எங்களைப் பார்த்தாலே தெரியவில்லையா. நாங்கள் ஒரே தாய் மக்கள். பார்த்தவுடனே சேர்ந்துவிட்டோம். தேவையான இடங்களுக்கு ஒன்றாக செல்வோம்.
எல்லாவற்றையும் மறந்துவிட்டோம். இதேபோல ஓ. பன்னீர்செல்வமும் எங்கள் கூட்டணிக்கு வருவார் என்கிற நம்பிக்கை உள்ளது. நீங்கள் எவ்வளவு கிளறினாலும் ஆளுங்கட்சியின் தவறை விமர்சிக்காமல் இருக்க மாட்டோம். வளமான தமிழகத்தை உருவாக்க நாங்கள் ஒன்றாக பயணிப்போம். திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வராமல் விட மாட்டோம். தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவதுதான் எங்களின் ஒரே இலக்கு" என்றார்.












Click it and Unblock the Notifications