கொரோனா.. அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.. விழிப்புணர்வோடு இருக்க கோரிக்கை
உலக நாடுகளில் கொரோனா அதிகரிப்பால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: உலக நாடுகளில் கொரோனா அதிகரிப்பால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு முதல்வர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 4வது அலை தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் தினசரி பாதிப்பு ஆயிரமாக குறைந்து விட்டது என்றாலும் இங்கும் நான்காவது அலை வர வாய்ப்பு உள்ளதாகவே அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
நாடுமுழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பினாலும் ஒருவித அச்ச உணர்வு இருந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 4ம் அலை வருமா வராதா என்று தெரியவில்லை. ஆனால் தேவையான நடவடிக்கை அனைத்தையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் 22 மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பூஜ்யமாக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன், கடந்த 10 நாட்களாக இறப்பு எண்ணிக்கையும் பூஜ்யமாக உள்ளது. பொது மக்கள் தொற்றில் இருந்து விடுபட்டு விட்டோம் என அலட்சியமாக இருக்கக்கூடாது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அடுத்த 3 மாதத்திற்கு தொடர்ந்து பின்பற்ற வேண்டும். மேலும், அருகே இருக்கும் மாநிலங்கள், நாடுகளில் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை
தமிழ்நாட்டில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சில நாடுகளில் தொற்று அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளிப்பதா அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பதா என்பது குறித்து முதல்வர் ஈடுபட்டுள்ளார்.தளர்வுகள் பற்றி அமைச்சர்கள்,அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தடுப்பூசி விபரங்கள்
இக்கூட்டத்தில், உலக அளவிலும், இந்திய அளவிலும் தற்போது கொரோனா தொற்றின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. கொரோனா இறப்புகளைத் தவிர்ப்பதற்கு தடுப்பூசியே அடிப்படை என்பதனைக் கருதி, மாவட்ட வாரியாக தடுப்பு ஊசி போட தகுதியானவர்களில், தடுப்பு ஊசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறித்த விபரங்களை முதலமைச்சர் கேட்டறிந்தார். வருகின்ற 31ஆம் தேதியுடன் கொரோனா பொது முடக்கம் தளர்வு முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் ஆலோசனையில் நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

விழிப்புணர்வு அவசியம்
உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து தமிழ்நாட்டில் பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கீழ்க்கண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தினார்.

நோய் தொற்று கண்டறிதல்
நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளனாவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் (Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) ஆகிய கோட்பாடுகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

தடுப்பூசி செலுத்தாதவர்கள்
தமிழ்நாட்டில் தற்போது வரையில் முதல் தவணை தடுப்பு ஊசி போடாத சுமார் 50 இலட்சம் நபர்கள் மற்றும் 2-ஆம் தவணை தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ள வேண்டிய சுமார் 1.32 கோடி நபர்களை கண்டறிந்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து அப்பகுதிகளில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்பட கூடிய 'மெகா' தடுப்பு ஊசி முகாம்களை முழுமையாக பயன்படுத்தி தடுப்பு ஊசி செலுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பூஸ்டர் தடுப்பூசி
குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் முதல் தவனை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை (Precautionary Dose) செலுத்தி கொள்ளாதவர்கள் மீது கவனம் செலுத்தி 'மெகா தடுப்பு ஊசி முகாம்கள்மூலம் தடுப்பு ஊசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

100 சதவிகிதம் தடுப்பூசி
மாவட்ட அளவில் முழுமையாக 100 சதவீதம் தடுப்பு ஊசி செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளை கண்டறிந்து, அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கௌரவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதர உள்ளாட்சி அமைப்புகள் 100% தடுப்பூசி செலுத்திய நிலையை அடைய ஊக்குவிக்க வேண்டும்.

முககவசம் அவசியம்
பொது சுகாதார வல்லுநர்கள் ஏற்கனவே அளித்துள்ள வழிமுறைகளின்படி, மாதிரிகள், மரபியல் சோதனைகளில் தற்போதைய கண்காணிப்பை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். பொது சுகாதார வல்லுநர்கள் கூறிய வழிமுறைகளான கை கழுவுதல் மற்றும் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications