மதுரை ஜல்லிக்கட்டில் சாதிய பாகுபாடு.. அமைச்சர் மீது குற்றச்சாட்டு.. பா.இரஞ்சித் அமைப்பு கண்டனம்!
சென்னை: மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சாதிய பாகுபாடு பார்க்கப்பட்டுள்ளதாக நட்சத்திர இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் குற்றம்சாட்டியுள்ளது. அமைச்சர் மூர்த்தி தன் சமூக மக்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், டோக்கன் வழங்கப்பட்ட போதும் மாடுபிடி வீரரான தமிழரசன் களத்திற்குள் அனுமதிக்கப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் மத்தியிலும், மாடுகளை அவிழ்த்துவிடுவதில் சாதிய பாகுபாடு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நேற்று நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழரசன் என்ற இளைஞருக்கு மாடுபிடிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழரசன் பேசுகையில், கடந்த 2 ஆண்டுகளாக சிறந்த மாடுபிடி வீரராக இருந்தவன்.

முதல்நாள் இரவு 2 மணியளவில் தான் எனக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது. ஒரு சிலருக்கு விரைவாக டோக்கன் வழங்கப்பட்டது. எங்களுக்கு டோக்கன் அளிக்கவே தாமதமாகியது. ஜல்லிக்கட்டில் மீண்டும் சாதி பார்க்க தொடங்கிவிட்டார்கள். இதனை கேட்க சென்ற என்னை அடித்து தாக்கினர். காலை 5 மணி முதலே வரிசையில் அமர்ந்துவிட்டோம்.
கருப்பாயூரணி கார்த்தி போன்றவர்கள் நேரடியாக எந்த வரிசையிலும் நிற்காமல் டோக்கன் வாங்கி சென்றுள்ளார். காளையால் காயமடைந்து ஊருக்கு சென்றிருந்தால் கூட பெருமையாக இருந்திருக்கும். என்னை அனுமதிக்காமல் வெளியே அனுப்பிவிட்டார்கள் என்று கண்ணீருடன் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் அமைச்சர் மூர்த்தி மீதும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் இயக்குநர் ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் தரப்பில் அமைச்சர் மூர்த்தி மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நீலம் பண்பாட்டு மையம் எக்ஸ் பக்கத்தில், மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு! இருமுறை முதல் பரிசு வென்ற வீரர் தமிழரசன் என்று அனைவரும் அறிந்தும் திட்டமிட்டு டோக்கன் அளிக்காமல் நேரத்தை வீணடித்துள்ள நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

அமைச்சர் மூர்த்தி தனது சாதி சேர்ந்த வீரருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதும், போராடி டோக்கன் வாங்கியும் தன்னை ஜல்லிக்கட்டில் அனுமதிக்கவில்லை ,களமிறங்க முயற்சித்தும் காவல்துறை ஒருபக்கம் தாக்கினார்கள். இதற்கு முழு காரணம் சாதிதான் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழரசன் கண்ணீர் பேட்டி சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன, வீரர் தமிழரசன் புறக்கணிக்கத்திருப்பது ஏன் ? என்று கேள்வி எழுப்பப்பட்டது. கடந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வென்ற அபிசித்தரும் அமைச்சர் மூர்த்தி மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications