எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று தொடங்குகிறது
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று தொடங்குவதால் நீட் தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட பல்வேறு மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அந்த வகையில் இந்த ஆண்டு நீர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் எளிதாக விரும்பும் அரசு கல்லூரிகளில் சேர்ந்துவிட முடியும். மற்றவர்கள் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இடம் பெற முடியும்.
தமிழ்நாட்டில் மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்கள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன. அதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, எஞ்சிய இடங்கள் மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தைச் சேந்தவர்களை வைத்து நிரப்பி கொள்ளலாம்.

அதேபோல், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பிடிஎஸ் இடங்களில் 1,254 இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 569 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் எஞ்சியுள்ள இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்பதால் அந்த இடங்களில் தனியார் கல்வி நிறுவனங்கள் நிரப்பி கொள்ளும்.
இந்நிலையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) ஒவ்வொரு ஆண்டும் நடத்தும்.
எனவே2023-24 கல்வி ஆண்டு நீட் தேர்வில் வென்ற மாணவர்கள் இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று (ஜூன் 28) தொடங்குகிறது.
இன்று காலை 10 மணி முதல் ஜூலை 10-ம் தேதி மாலை 5 மணி வரை www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது.
நீட் தேர்வில் வென்று விண்ணப்பித்தவர்களுக்கு முதலில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, கலந்தாய்வு ஜூலை 3-வது வாரத்தில் தொடங்கும். சிறப்பு பிரிவினர் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு நேரடியாகவும், பொதுக்கலந்தாய்வு ஆன்லைனிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,.
கடந்த ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மொத்தம் 10,385 இடங்கள் இருந்தன. இந்தாண்டு எத்தனைஇடங்கள் என்பது அதிகாரப்பூர்வமாக விரைவில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications