கொடுமை! நீட் PG தமிழக தேர்வர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்கள்.. போக வரவே ரூ.40,000 ஆகுமாம்!
சென்னை: நீட் முதுநிலை தேர்வு வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் ஏராளமானோருக்கு ஆந்திர மாநிலத்தின் உட்பகுதியில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அங்கு செல்வதற்கு ரயில்களில் டிக்கெட் இல்லாத நிலையில், விமான டிக்கெட் 15 ஆயிரத்திற்கும் மேல் இருப்பதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவ பட்டமேற்படிப்புகளான எம்.டி, எம்.எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள், நீட் முதுநிலை தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. இந்தத் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது.

எம்.டி, எம்.எஸ், முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கு 2024 - 2025 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி வெளியிட்டது.
அதன்படி, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 259 நகரங்களில் ஜூன் 23 ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில் அதற்கு முந்தைய நாள் இரவு திடீரென நீட் - முதுநிலை தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது. நீட் இளநிலை தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ல் நடைபெறும் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் அறிவித்தது. வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அன்று நீட் முதுநிலை தேர்வு, காலை, மதியம் என இரண்டு ஷிப்ட்களாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீட் - பி.ஜி தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் பலருக்கு, ஆந்திராவின் உட்பகுதியில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு மையங்கள் ஒதுக்க விருப்பம் தெரிவித்த தேர்வர்களுக்கு ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் எங்கோ ஒரு இடத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அந்த தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு ரயில்களில் டிக்கெட் இல்லை என்றும், விமான டிக்கெட்டுகளுக்கு போகவே ரூ.15,000 ஆகும் என்றும், தங்குமிடம் மற்றும் உணவும் சேர்த்து, நீட் - பி.ஜி தேர்வு எழுதச் செல்பவர்களுக்கு ரூ.40,000 செலவாகும் என்று தேர்வர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து நீட் முதுநிலை தேர்வு எழுதும் தேர்வர்களை வதைக்கும் வகையிலேயே வெளி மாநிலங்களில் போக்குவரத்து வசதி இல்லாத இடங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், தேர்வு மையங்களை மாற்ற வேண்டும் என்றும் தமிழக தேர்வர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications