பிரிந்த தையல்.. பிரசவத்தில் நேர்ந்த கொடூரம்..பணியில் அரசு மருத்துவர் அலட்சியம்.. பைன் போட்ட கோர்ட்!
சென்னை: பிரசவத்தின்போது அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அலட்சியமாக நடந்துகொண்டதன் விளைவாக பெண் ஒருவர் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளார். இதற்கு காரணமாக அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பெண்ணுக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக மனுதாரர் தொடர்ந்த வழக்கில், கடந்த 2005 நவம்பர் 4ம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மனுதாரர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அதே நாளில் அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால் பிரசவத்திற்கு முன்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது அறுவை சிகிச்சை மூலமாகவே குழந்தை பிறந்துள்ளது. பின்னர் தாயும் குழந்தையும் வீடு திரும்பியுள்ளனர்.
அடுத்த ஷாக்.. திருவள்ளூர் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.. மக்கள் சாலை மறியல்

அறுவை சிகிச்சை
ஆனால் இதற்கடுத்த சில நாட்களிலேயே அறுவை சிகிச்சை தையல் இடப்பட்ட பகுதியிலிருந்து ரத்தமும், சீழும் வடியத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து அவர்கள் அதே மருத்துவமனையை நாடியுள்ளனர். பின்னர் பழைய தையல் பிரிக்கப்பட்டு புதிய தையல் போடப்பட்டது. ஆனாலும் நிலைமை சீரடையவில்லை. தொடர்ந்து சிறுநீர், மலம் கழிப்பதில் பிரச்னை மேலெழுந்துள்ளது. இது குறித்து மருத்துவமனையில் புகார் அளித்தாலும் முறையாக சிகிச்சை செய்யப்படவில்லை.

தையல்
பின்னர் மனுதாரர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இயல்பு நிலைக்கு திரும்ப மேலும் 3 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக அவர் சுமார் ரூ.1.5 லட்சம் வரை செலவு செய்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே பிரசவத்தின்போது உரிய சிகிச்சையளிக்காத மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் தமிழ்செல்வி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

விசாரணை
இந்த மனுமீதான விசாரணையில், தவிர்க்க முடியாத சூழலில்தான் எபிசியோடமி அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல நோயாளிக்கு உரிய முறையில் மருத்துவம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதன் பின்னரும் காயங்கள் குணமாகாததன் விளைவாக நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்திடப்பட்டு மீண்டும் தையல் போடப்பட்டது என்றும் மருத்துவர் தரப்பில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரசவத்தின்போது குழந்தை வெளியேறுவதற்கு போதிய அளவு வழி இல்லாமல் இருக்கும் நிலையில் பிறப்புறுப்பின் கீழ் சிறிதளவு கிழிக்கப்பட்டு வழி ஏற்படுத்தப்படும். பின்னர் பிரசவம் முடிந்த பின்னர் இது அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்படும். இந்த வழிமுறைக்கு எபிசியோடமி சிகிச்சை என்று பெயர்.

தீர்ப்பு
பின்னர் இரு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிரசவத்தை அடுத்து ஏற்பட்ட உடல் நலக்கோளாறுகளுக்கு முழுக்க முழுக்க அரசு மருத்துவமனையே பொறுப்பேற்க வேண்டும். அரசு மருத்துவர் தரப்பில் முறையான சிகிச்சையளிக்கப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
தொடர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனுதாரர் தனது குழந்தையை சரியாக வளர்க்க முடியவில்லை என்றும், எனவே ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தான் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.