நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் புதிய நேர அட்டவணை.. தாம்பரத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரயில்வே
சென்னை: வ.எண் 20665/20666, திருநெல்வேலி - சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் 24.9.23 தேதி பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்படுகிறது . 25.9.23 முதல் சேவையை தொடங்குகிறது செவ்வாய் தவிர்த்து வாரம் 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவையில் கடைசி நேரத்தில் டவிஸ்ட்டாக தாம்பரத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது தெற்கு ரயில்வே.
சென்னையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள், நாடு முழுவதும் அடுத்தடுத்து அதிக வரவேற்பின் காரணமாக பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகிறது. டெல்லி-வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி தொடங்கிய வந்தே பாரத் ரயில் சேவைகள். நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை-மைசூரு, சென்னை-கோவை ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என எல்லா மாநிலங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் அடுத்தடுத்து தொடங்கி வைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.
வந்தே பாரத் ரயில்கள் எல்லாம் பகல் நேர அதி விரைவுரயில்கள், அதேநேரம் குளிர்சாதன வசதி மற்றும் வேகமாக செல்ல முடியும் என்பதால் விமானத்தில் செல்லும் பலர் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கிறார்கள். விமானத்திற்கு பதில் வந்தே பாரத்தில் செலவ்து சிறப்பான முடிவாக இருக்கிறது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டின் பல்வேறு நகர மக்கள் வந்தே பாரத் ரயிலை அதிக அளவில் வரவேற்கிறார்கள்.சென்னை கோவை வந்தே பாரத் ரயிலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்த காரணத்தால், தமிழ்நாட்டிலேயே அதிக லாபம் ஈட்டும் ரயில் வழித்தடமான சென்னை நெல்லை வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. அதை பரிசீலித்த மத்திய அரசு நெல்லைக்கு வந்தே பாரத் ரயில்களை இயக்க அனுமதி அளித்தது.
இதனால் தெற்கு ரயில்வே சார்பில் சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதையடுத்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணிகள், வந்தே பாரத் பெட்டிகளை பராமரிக்க தேவையான முற்றிலும் மின்மயமாக்கப்பட்ட பிட்லைன் பணிகள் ஆகியவை வேகமாக முடிக்கப்பட்டன.

இதையடுத்து , வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. அதில் எங்கெல்லாம் ரயில் நிற்கும் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி சென்னையை விட்டால் அடுத்து விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலியில் நிற்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
சென்னையில் தாம்பரத்தில் நெல்லை வந்தே பாரத் நிற்காது என்பது சென்னை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.. தென்மாவட்ட மக்கள் பலரும் தெற்கு ரயில்வேயிடம் தாம்பரத்தில் வந்தே பாரத் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தென் மாவட்ட மக்களுக்காக தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நிறுத்தப்பட்ட பின்னரே, காலியாக சென்று வந்த அந்த ரயில், முழுமையாக நிரம்பி செல்ல ஆரம்பித்தது. இதை சுட்டிக்காட்டி சென்னை மக்கள் பலரும் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தெற்கு ரயில்வே நெல்லை வந்தே பாரத் ரயில் தாம்பரத்திலும் நிற்கும் என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வ.எண் 20665/20666, திருநெல்வேலி - சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் 24.9.23 தேதி பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்படுகிறது . 25.9.23 முதல் சேவையை தொடங்குகிறது. செவ்வாய் தவிர்த்து வாரம் 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இதன்படி பார்த்தால் 27ம் தேதி முதல் தினசரி (செவ்வாய் தவிர) எல்லா நாட்களும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வந்தே பாரத் ரயில் எங்கெல்லாம் நிற்கும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 6மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில், விருதுநகருக்கு 7.13க்கு வந்துவிடும். இரண்டு நிமிடம் கழித்து அதாவது 7.15க்கு புறப்படும். அதன்பிறகு 7 .50க்கு மதுரைக்கு செல்லும். அதனை தொடர்ந்து 8.40க்கு திண்டுக்கல், 9.50க்கு திருச்சியும், 11.54க்கு விழுப்புரமும், மதியம் 1.13க்கு தாம்பரமும், 1.50க்கு சென்னை எழும்பூரும் செல்லும்.
இதேபோல் மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50க்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், மதியம் 3.13க்கு தாம்பரமும், மாலை 4.39க்கு விழுப்புரமும், மாலை 6.40க்கு திருச்சியும், இரவு 7.56க்கு திண்டுக்கல்லும், இரவு 8.40க்கு மதுரையும், இரவு 9.13க்கு விருதுநகரும், இரவு 10.40க்கு திருநெல்வேலியும் சென்றடையும் என்று தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் தாம்பரம் மட்டுமே கடைசி நேர திருப்பமாக ஸ்டாப்பிங் சேர்க்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மக்களுக்காக கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்படவில்லை.
https://x.com/drmmadurai/status/1705226341686378880?s=20











Click it and Unblock the Notifications