நேபாள வெள்ளம்: "சீன பகுதிக்குள் தப்பி ஓடியவர்கள் நிலை தெரியல”.. டிராவல்ஸ் உரிமையாளர் அதிர்ச்சி தகவல்
சென்னை: நேபாள சீன எல்லைப் பகுதியில் குடியுரிமை மையத்தின் வெள்ள பாதிப்பு சிசிடிவி காட்சியில் நீல நிற உடையில் தப்பி ஓடும் நபர்கள் எங்கள் குழுவினர் தான். அவர்கள் சீன பகுதிக்குள் ஓடியுள்ளனர். அந்த பகுதி முழுவதும் 6 அடி உயர சேற்றால் மூடப்பட்டுள்ளது என சென்னை குரோம்பேட்டை டிராவல்ஸ் உரிமையாளர் மறவேள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
வெள்ள பாதிப்பு குறித்து நேபாள அரசின் தகவல் மட்டுமே கிடைக்கிறது. சீன அரசு மூலம் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எங்கள் குழுவினர் சீன பகுதிக்குள் சிக்கியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திபெத்தின் இமயமலை பகுதியில் கடந்த 26 ஆம் தேதி மிகப்பெரிய பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், நேபாளத்தை தாக்கியது. அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வெள்ளத்தில் வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் ஆயிரக்கணக்கானோர் மாயமாகி உள்ளனர்.
சென்னை குரோம்பேட்டையில் இயங்கி வரும் மகாதேவ் கைலாஷ் யாத்ரா என்ற தனியார் ஆன்மீக சுற்றுலா நிறுவனம் சார்பில் கடந்த 14 ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து 49 பேர் நேபாளம் வழியாக சீன எல்லையில் உள்ள கைலாஷ் புறப்பட்டுச் சென்றனர். டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரின் மகன் சத்ய நாராயணன் தலைமையில் சென்ற இந்த குழுவில் 49 பேர் சென்றுள்ளனர்.
சென்னை குரோம்பேட்டை, பெரம்பூர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இந்த சுற்றுலா பயணக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
சுமார் 14 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் சென்னை திரும்ப வேண்டிய நிலையில் நேபாள சீன எல்லைப் பகுதியில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் நடைமுறைகளை மேற்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக காட்டாற்று வெள்ளத்தால் அந்த குடியேற்ற அலுவலக கட்டிடமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெள்ளத்தில் சிக்கிய குழுவைச் சேர்ந்த தமிழர்கள் 49 பேர் பற்றி எந்த தகவலும் இல்லை. நீல நிற உடை அணிந்திருந்த குழுவைச் சேர்ந்தவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் இருந்து தப்பிக்க ஓடுவதாக ஒரு சிசிடிவி காட்சி வெளியாகியிருந்தது. அது சென்னையில் இருந்து சென்ற குழுவைச் சேர்ந்தவர்கள் தான் என டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் மறவேள் தெரிவித்துள்ளார்.
நேபாளத்திற்கு சென்று வந்த சென்னை குரோம்பேட்டை டிராவல்ஸ் உரிமையாளர் மறவேள் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "குடியுரிமை மையத்தின் வெள்ள பாதிப்பு சிசிடிவி காட்சியில் நீல நிற உடையில் தப்பி ஓடும் நபர்கள் எங்கள் குழுவினர் தான். மலை மேல் ஓடியவர்கள் ஒரு சிலர் தப்பியிருக்கலாம். சீன பகுதிக்குள் ஓடியுள்ளனர்.
அந்தப் பகுதி முழுவதும் 6 அடி உயர சேற்றால் மூடப்பட்டுள்ளது. எங்கள் 3 குழுவும் இதில் சிக்கி உள்ளனர். வெள்ள பாதிப்பு குறித்து நேபாள அரசின் தகவல் மட்டுமே கிடைக்கிறது. சீன அரசு மூலம் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எங்கள் குழுவினர் சீன பகுதிக்குள் சிக்கியுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
