சீமான் தோள் மீது ஏறி அமர்ந்திருக்கும் 'அந்த ஒருவன்'.. வெற்றிக்குமரன் சொல்வது 'அவரை'யா? பரபர சண்டை!
சென்னை: சீமான் தோள் மீது ஏறி அமர்ந்திருக்கும் "ஒருவன்"தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம் என நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் குற்றம் சாட்டியிருந்தார். அந்த தோள் மீது ஏறி அமர்ந்திருக்கும் "ஒருவன்" யார் என்பதுதான் இப்போது சமூக வலைதளங்களில் விவாதமாகி இருக்கிறது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அடுத்த நிலையில் இருந்த 2-ம் கட்ட தலைவர்கள் பலர் ஒவ்வொரு கட்டமாக வெளியேறினர். அய்யநாதன், வியனரசு, கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி என பலரும் ஒவ்வொரு குற்றச்சாட்டை முன்வைத்து வெளியேறினர் அல்லது வெளியேற்றப்பட்டனர்.

இந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த வெற்றிக்குமரன். சீமானுடன் இணைந்து நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கி அதை கட்சியாக மாற்றி தென் மண்டல தளபதியாக வலம் வந்தவர் வெற்றிக்குமரன். கடந்த சில மாதங்களாகவே நாம் தமிழர் கட்சியின் 'தொடர்பு' எல்லைக்கு வெளியேதான் இருந்தார்.
வெற்றிக்குமரன் நீக்கம்: சில நாட்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியின் காவிரி உரிமை போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார் வெற்றிக்குமரன். அதே நாள் இரவு, வெற்றிக்குமரன் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
தோள் மீது அமர்ந்திருக்கும் ஒருவன்..: இது தொடர்பாக சீமானுக்கு கடிதம் அனுப்பிய வெற்றிக்குமரன், நான் மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்க்கிறேன். என் நினைவுக்கு எட்டிய வரையில் ஒரு சிறு தவறு கூட செய்யவில்லை. உங்களின் மீது இருந்த அதீத அக்கறையின் காரணமாக தற்பொழுது, உங்களின் தோள் மீது ஏறி அமர்ந்திருக்கும் ஒருவனிடம் அவனை என் சொந்த தம்பியாக நினைத்து உங்களைப் பற்றி வருந்தி புலம்பி இருக்கிறேன். அதைத் தவிர வேற எந்த தவறும் செய்யவில்லை.

எப்படி என்னை நீக்க முடியும்?: நான் மீறியதாக குற்றம் சாட்டி நீக்கி இருக்கிறீர்கள். நான் மீறிய கட்சியின் கட்டுப்பாடு என்ன? ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின் படி நீக்கி உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறீர்கள். ஒழுங்கு நடவடிக்கை குழுவில் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள்? யார் யாரெல்லாம் அவர்கள்? இந்த குற்றச்சாட்டு குறித்து என்னிடம் விசாரித்தார்களா? என்னிடம் விசாரணை செய்து தங்களிடம் அறிக்கை ஏதும் சமர்ப்பித்தார்களா? அப்படி சமர்ப்பித்து இருந்தால் அதனுடைய விவரங்கள் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றேன் என சரமாரியாக கேள்வி கேட்டு 2 பக்க கடிதம் அனுப்பி இருந்தார்.
அந்த ஒருவன் யார்?: இந்த கடிதத்தில் "தற்பொழுது, உங்களின் தோள் மீது ஏறி அமர்ந்திருக்கும் ஒருவனிடம் " என வெற்றிக்குமரன் குறிப்பிட்டிருப்பது யாரை என்பதுதான் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சியில் பத்தோடு பதினொன்றாக இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி அதனாலேயே அக்கட்சியில் இருந்து சீமானால் வெளியேற்றப்பட்டு தற்போது மீண்டும் 'லைம் லைட்டில்' இருந்து வரும் அந்த நபரா? அல்லது வெளியே முகம் தெரியாத நபரா? என்பதுதான் சமூக வலைதளங்களில் நடைபெறும் விவாதமாக உள்ளது.












Click it and Unblock the Notifications