படிப்பை மட்டும் எத்தனை தடை வந்தாலும் விடக்கூடாது.. முதல்வர் ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்!
சென்னை: எந்த இடர்பாடு வந்தாலும் கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.
மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 57 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவச்சந்திரன் என்பவர் தமிழகத்தில் முதலிடமும் இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் யுபிஎஸ்சி வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "கடந்த காலங்களில் யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழர்கள் குறைவாகவே தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 57 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு 'நான் முதல்வன்' திட்டம் பலன் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்தப் போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறவே 'நான் முதல்வன்' திட்டம் இருக்கிறது. மாணவர்களின் திறனை மேம்படுத்தவே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எந்த இடர்பாடு வந்தாலும் கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது. அதிகாரம் என்பது சக மனிதர்களுக்கும் சமூகத்திற்கும் உதவுவதாக இருக்க வேண்டும்.
மாணவர்கள் மீதும், திட்டம் மீதும் வைத்திருந்த நம்பிக்கை பலன் அளித்துள்ளது. தமிழகத்திற்கென அறிவு முகம் இருக்கிறது. தமிழக அதிகாரிகளுக்கு தனி மதிப்பு உள்ளது. கடமையை நிறைவேற்றி ஒரு தந்தைக்கு கொடுக்கும் மகிழ்ச்சியை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள்.
இந்தியாவின் எந்த மூலைக்குச் சென்று நீங்கள் பணியாற்றினாலும், சமத்துவம், சமூகநீதி, வாய்மை, நேர்மை ஆகியவற்றை மனதில் வைத்து, ஏழை எளிய மக்களின் உயர்வுக்காகப் பாடுபடுங்கள். உங்களது சிந்தனையால் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டால் மக்களின் மனதில் ஒரு நிரந்தர இடம் கிடைக்கும்" என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications