சென்னை உயர்நீதிமன்ற 33வது தலைமை நீதிபதி.. பதவியேற்றார் கங்கா பூர்வாலா! பதவி பிரமாணம் செய்த ஆளுநர்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலாவுக்கு இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வரர்நாத் பண்டாரி பணி ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து தலைமை நீதிபதியாக முரளிதரை நியமிக்க வேண்டும் என்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. இதனை மத்திய அரசு ஏற்காமல் காலம் தாழ்த்தினர்.

இதற்கிடையே மூத்த நீதிபதி எம்.துரைச்சாமி, நீதிபதி டி.ராஜா ஆகியோர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து பணி ஓய்வு பெற்றனர். கடந்த 8 மாதங்களாக தலைமை நீதிபதி பணியிடம் நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி.கங்கா பூர்வாலாவை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரைத்தது.
இதனை ஏற்ற குடியரசு தலைவர், நேற்று முன்தினம் எஸ்.வி.கங்கா பூர்வாலாவை தலைமை நீதிபதியாக நியமிக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து இன்று காலை 10 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா பதவி எற்றுக் கொண்டார்.
அவருக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர் நாடு விடுதலை பெற்ற பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கும் 33 வது நீதிபதியாவார். இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன் உள்ளிட்ட நீதிபதிகள், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ரகுபதி, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல் தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர்கள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், மூத்த வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். அதேபோல் புதிய தலைமை நீதிபதிக்கு அமைச்சர்கள் பூங்கொத்து மற்றும் புத்தகம் அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த 1962 ஆம் ஆண்டு மே மாதம் மகாராஷ்டிராவில் பிறந்த நீதிபதி கங்கா பூர்வாலா சட்டப்படிப்பை முடித்து 1985 ஆம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார். கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கங்கா பூர்வாலா, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் முதல் மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications