தாம்பரம் ரயில் நிலையத்தில் புதிய வசதி.. காத்திருக்கும் பயணிகளுக்கு இது நிச்சயம் நல்ல செய்தி
சென்னை: சென்னையில் தாம்பரம் ரயில் நிலையம் 3-வது முனையமாக மாற்றப்பட்டது. அதன்பிறகு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். ஆகவே பயணிகளின் வசதிக்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் முதல் முறையாக ஏ.சி. வசதியுடன் காத்திருப்பு அறை திறக்கப்ட்டது. அங்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.35 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தாம்பரம் ரயில் நிலைய மேற்பார்வையாளர் முகமது அப்துல் ரகுமான் மற்றும் அதிகாரிகள் இணைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதிய காத்திருப்பு அறையை திறந்து வைத்தனர்.
சென்னை மாநகரில் தாம்பரம் ஒரு முக்கியமான முனையமாக இருப்பதால், நாளொன்றுக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட ரயில்கள் (புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட) வந்து செல்கின்றன. இதில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற சுமார் 50-க்கும் மேற்பட்ட முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் தினசரி தாம்பரம் வழியாக இயக்கப்படுகின்றன அல்லது தாம்பரத்தில் இருந்தே புறப்படுகின்றன.

பல்வேறு வசதிகள்
தாம்பரம் ரயில் நிலையத்தினை மூன்றாவது முனையாக மாற்றும் ஒரு பகுதியாக புதிய நடைமேடைகளும் அமைக்கப்பட்டன. அத்துடன் பயணிகளின் வசதிக்காக அனைத்து நடைமேடைகளையும் இணைக்கும் வகையில் எக்ஸ்லேட்டர் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கிழக்கு மற்றும் மேற்கு நுழைவு வாயில் பகுதிகளில் எக்ஸ்லேட்டர் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் அடுத்தடுத்து மேம்படுத்தப்பட்டன.
ஆடம்பர சோபா இருக்கை
இந்த அறையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக ஆடம்பர சோபா இருக்கை வசதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக நவீன கழிப்பறைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, இலவச வை-பை வசதி, பல்நோக்கு சிற்றுண்டி கடை, செல்போன் சார்ஜிங் பாயிண்ட்டுகள், இலவசமாக பொருட்கள் வைக்கும் ரேக்குகள், பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கின்றன
கட்டணம் எவ்வளவு
இந்த ஏ.சி. காத்திருப்பு அறை 24 மணிநேரமும் செயல்படுகிறது. இதற்கு கட்டணமாக ஒரு மணி நேரத்துக்கு ரூ.35 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 35 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை பணம் மற்றும் டிஜிட்டல் கட்டண முறைகள் மூலம் வழங்க முடியும். 5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மணிக்கு 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஐந்து வயதிற்கு உள்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. இந்த வசதியை நேரில் போய் தான் முன்பதிவு செய்ய முடியும். மொத்தம் 80 பேர் உட்காரும் வகையில் வசதிகள் உள்ளன. இதனை தனியார் டெண்டர் முறையில் எடுத்துள்ளார்கள். அவர்களிடம் கட்டணம் செலுத்தி வசதிகளை பெற முடியும்.












Click it and Unblock the Notifications