இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்!
சென்னை: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வரி விதிப்புகள், சட்ட மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.
2025 வருமான வரி சட்டத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய விதிகள், ஊதியம் பெறும் வரி செலுத்துவோர் அறிந்திருக்க வேண்டிய பல மாற்றங்களைக் கொண்டுள்ளன.
1961 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த பழைய வருமான வரி சட்டம் நீக்கப்பட்டு எளிமையான வருமான வரி சட்டம் 2025 இன்று முதல் அமலாகிறது. இனி முந்தைய ஆண்டு, மதிப்பீட்டு ஆண்டு என்ற குழப்பங்கள் இல்லாமல் ஒரே வரி ஆண்டு என அழைக்கப்படும்.

புதிய நிதியாண்டு 2026-27 இல், ஊதியம் பெறும் வரி செலுத்துவோர் அறிந்திருக்க வேண்டிய முதல் 10 முக்கிய மாற்றங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம். இந்த மாற்றங்கள் உங்கள் வரித் திட்டத் தேர்விலும், சேமிப்புகளிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.
1. புதிய மற்றும் பழைய வருமான வரி திட்டங்களின் கீழ், வருமான வரி அடுக்குகள் மற்றும் வருமான வரி விகிதங்கள் மாறாமல் உள்ளன. பழைய வரித் திட்டம், பல பிடித்தங்கள் மற்றும் விலக்குகளை வழங்குகிறது. ஆனால் குறைந்த வருமான நிலைகளில் அதிக வரி விகிதங்களைக் கொண்டுள்ளது. புதிய வரித் திட்டம், மிகக் குறைவான விலக்குகளைக் கொண்டிருந்தாலும், அதிக வருமான நிலைகளில் குறைந்த வரி விகிதங்களைக் கொண்டுள்ளது.
60 வயதுக்குட்பட்ட தனிநபர்களுக்கான பழைய வரித் திட்டம் (ரூ 2.5 லட்சம் வரை வரி இல்லை, ரூ 2.5-5 லட்சம் வரை 5%, ரூ. 5-10 லட்சம் வரை 20%, ரூ 10 லட்சத்திற்கு மேல் 30%) மற்றும் புதிய வரித் திட்டம் (ரூ 4 லட்சம் வரை வரி இல்லை, ரூ 4-8 லட்சம் வரை 5%, ரூ.8-12 லட்சம் வரை 10%, ரூ.12-16 லட்சம் வரை 15%, ரூ.16-20 லட்சம் வரை 20%, ரூ.20-24 லட்சம் வரை 25%, ரூ.24 லட்சத்திற்கு மேல் 30%) ஆகியவற்றில் வரி விகிதங்கள் அப்படியே உள்ளன.
வரி விகிதங்கள் மாறாமல் இருந்தாலும், பழைய வருமான வரி திட்டத்தின் கீழ் உள்ள விலக்கு வரம்புகளில் ஏற்பட்ட பல மாற்றங்கள், நீங்கள் தேர்வுசெய்யும் திட்டம் குறித்த முடிவை மாற்றக்கூடும். சில சந்தர்ப்பங்களில், புதிய வருமான வரி விதிகளின் கீழ் அதிக விலக்கு வரம்புகளுடன், பழைய திட்டம் மீண்டும் கவர்ச்சிகரமானதாக மாறுகிறது.
2. மெட்ரோ நகரங்கள் பட்டியல் விரிவு - HRA சலுகை
வாடகை வீட்டில் வசிப்பவர்கள் 50% HRA சலுகை பெற இதுவரை சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா மட்டுமே மெட்ரோ நகரங்களாக இருந்தன. இனி பெங்களூரு, ஹைதராபாத், புனே, அகமதாபாத் நகரங்களும் இந்தப் பட்டியலில் சேர்கின்றன. இதனால் அங்குள்ள ஊழியர்களுக்கு வரி மிச்சமாகும்.
3. குழந்தைகளின் கல்வி & விடுதி உதவித்தொகை உயர்வு
பழைய வரித் திட்டத்தில் இருப்பவர்களுக்கு இது ஜாக்பாட்:
கல்வி உதவித்தொகை: ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.100-லிருந்து ரூ.3,000 ஆக உயர்வு.
விடுதி செலவு: மாதம் ரூ.300-லிருந்து ரூ.9,000 ஆக உயர்வு.
(இரண்டு குழந்தைகள் வரை இந்தச் சலுகையைப் பெறலாம்).
4. பான் (PAN) கார்டு விதிகளில் மாற்றம்
சிறு முதலீடுகள் மற்றும் ஹோட்டல் பில்களுக்கு பான் கார்டு காட்டும் கட்டாயம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆதாருடன் பான் கார்டை இணைக்காதவர்களுக்கு அபராதம் மற்றும் பான் கார்டு முடக்கம் போன்ற நடவடிக்கைகள் இனி மிகக் கடுமையாக இருக்கும்.
5. கார் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு கூடுதல் வரி
நிறுவனம் மூலம் கார் மற்றும் ஓட்டுநர் வசதி பெறும் ஊழியர்களுக்கான 'சலுகை மதிப்பு' (Perks Value) உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்குச் செலுத்த வேண்டிய வரிப்பொறுப்பு சற்று அதிகரிக்கும்.
6. 'வரி ஆண்டு' (Tax Year) - இனி குழப்பம் இல்லை
முன்பு 2025-26 நிதியாண்டுக்கு 2026-27 மதிப்பீட்டு ஆண்டு என இரண்டு ஆண்டுகளைக் குறிப்பிட வேண்டும். இனி அப்படித் தேவையில்லை. எந்த ஆண்டில் வருமானம் ஈட்டுகிறீர்களோ, அதே ஆண்டை 'வரி ஆண்டு 2026-27' எனக் குறிப்பிட்டால் போதுமானது.
7. உணவு கூப்பன் (Food Voucher) உயர்வு
நிறுவனங்கள் வழங்கும் ஒரு வேளை உணவுக்கான வரி விலக்கு வரம்பு ₹50-லிருந்து ரூ.200 ஆக நான்கு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
8. கடன் மற்றும் படிவங்கள் மாற்றம்
நிறுவனங்களிடம் இருந்து வரி இல்லாமல் பெறப்படும் கடனுக்கான வரம்பு ரூ.20,000-லிருந்து ரூ.2 லட்சமாக அதிகரிப்பு.
நீங்கள் பழகிய படிவம் 16 (Form 16) இனி கிடையாது, அதற்குப் பதிலாக படிவம் 130 பயன்படுத்தப்படும்.
9. ஐடிஆர் (ITR) திருத்தம் செய்ய கூடுதல் அவகாசம்
உங்கள் வரித் தாக்கலில் தவறு இருந்தால், அதைத் திருத்தி தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை மட்டுமே அவகாசம் இருந்தது. இனி ஒரு சிறிய கட்டணத்துடன் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
10. மீண்டும் ஒருமுறை கணக்குப் போடுங்கள்!
பழைய வரித் திட்டத்தில் கல்வி உதவித்தொகை மற்றும் HRA உள்ளிட்ட பல சலுகைகள் உயர்த்தப்பட்டுள்ளதால், "புதிய திட்டம் தான் பெஸ்ட்" என்று முடிவெடுக்காமல், உங்கள் முதலீடுகளை வைத்து மீண்டும் ஒருமுறை கணக்கிட்டுப் பாருங்கள். பழைய திட்டமே உங்களுக்கு அதிக லாபம் தரக்கூடும்!












Click it and Unblock the Notifications