"ஓரிரு நாட்களில் புதிய கட்சி ஒன்று அதிமுக கூட்டணிக்குள் வரவுள்ளது" - எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்
சென்னை: அதிமுக கூட்டணியில் ஒரு சில நாட்களில் புதிய கட்சி வர உள்ளது என சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அதிமுக வேட்பாளர் நேர்காணலின்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக சார்பில் விருப்ப மனு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனுக்களை வழங்கியிருந்தனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவதற்காக 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களுடைய தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து மட்டும் 2,187 விருப்ப மனுக்கள் அளித்திருந்தனர்.

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கியவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை நேர்காணல் தொடங்கியது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர், நேர்காணலை நடத்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமை அன்று சேலம் மாநகர், சேலம் புறநகர், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, கரூர், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் நடந்தது.
சனிக்கிழமை அன்று கன்னியாகுமரி, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டம் மற்றும் மாலை திருவாரூர், மதுரை, தேனி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் வாரியாக போட்டியிட விருப்பமனு செய்தவர்களிடம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது.
இன்று விருதுநகர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டங்களில் விருப்ப மனு அளித்தவர்களிடம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தலைமையிலான குழுபினர் இன்று நேர்காணல் நடத்தி வருகின்றனர். நேர்காணலில் பங்கேற்ற அதிமுகவினரிடம் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை கேட்டு வருகிறார். அதன்படி, அதிமுகவில் எத்தனை ஆண்டுகளாக உறுப்பினர்களாக இருக்கிறீர்கள், அதிமுக நடத்திய என்னென்ன போராட்டங்களில் பங்கேற்றுள்ளீர்கள், உங்கள் தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? என்பது உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.
வேட்பு மனு தாக்கல் செய்தவர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுக கூட்டணியில் ஒரு சில நாட்களில் புதிய கட்சி வரவுள்ளது. அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளது, மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும், நம்பிக்கையுடன் இருங்கள்; அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் வெற்றிக்கு உழைக்க வேண்டும்" என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications