வந்துருச்சு மெசேஜ்.. 5 கிலோ மேல் பாக்கெட் செய்யப்பட்டால் "இது" கட்டாயம்.. புது நடைமுறை: மத்திய அரசு
சென்னை: 5 கிலோவிற்கு மேலாக பாக்கெட் செய்யப்படும் பொருட்களில், ஒரு கிலோ அல்லது ஒரு லிட்டர் விலையை குறிப்பிடுவது அவசியம் என்ற விதிமுறையை மத்திய அரசு அமல்படுத்தியிருக்கிறது.. இதற்கான காரணங்கள் என்னென்ன?
பாக்கெட் செய்யப்பட்ட உணவு பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு, இறக்குமதி செய்பவர்களுடன் விலை பட்டியலில் ஒரு கிலோ அல்லது ஒரு லிட்டர் விலையை குறிப்பிட வேண்டும் என்று மத்திய அரசு நடைமுறைப்படுத்த முயன்றது. ஆனால், ஒவ்வொரு முறையும் இந்த முயற்சி தள்ளிப்போடப்பட்டே வந்தது.

புதிய கட்டுப்பாடு: இந்நிலையில், நேற்று முதல், இது தொடர்பான புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது... அதன்படி, ஒரு கிலோவிற்கு அதிகமாக எடை கொண்ட பாக்கெட் செய்யப்பட்ட உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் விற்கப்படும் சில்லறை விலையுடன், ஒரு கிலோவிற்கு யூனிட் விற்பனை விலை என்று அச்சிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு லிட்டருக்கு மேல் அளவு கொண்ட உணவு பொருட்களை உற்பத்தி செய்யும்போது, அதன் சில்லறை விலையுடன் ஒரு லிட்டருக்கு யூனிட் விற்பனை விலை என்பதனை குறிப்பிடுவது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறை: குறிப்பாக, 5 கிலோ பாக்கெட் கொண்ட பொருளின் மொத்த விலையுடன், ஒரு கிலோவின் விற்பனை விலை என்று தனியாக அச்சிட வேண்டுமாம்.. பிறகு, ஒரு கிலோவிற்கும் குறைவாக பாக்கெட் செய்யப்படும் உணவு பொருட்களின் விலையுடன் ஒரு கிராம் விற்பனை விலை அச்சிடப்பட வேண்டும் என்பதே இந்த புதிய நடைமுறையாகும்.
அந்தவகையில், ஒரு கிலோவிற்கும் குறைவான பாக்கெட் செய்யப்பட்ட உணவு பொருளுக்கு அதன் மொத்த விலையுடன், ஒரு கிராம் விற்பனை விலையும், ஒரு லிட்டருக்கு குறைவான பாக்கெட் செய்யப்பட்ட பொருளுக்கு ஒரு மில்லி லிட்டர் விலையையும், ஒரு மீட்டருக்கு மேல் அளவு கொண்ட பொருளுக்கு, ஒரு செ.மீ. விலையையும் குறிப்பிட வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
அபராதம்: பேனா, பென்சில்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையை கொண்ட பாக்கெட்டுகளில், ஒரு பென்சில் அல்லது பேனாவின் யூனிட் விலையை குறிப்பிட வேண்டுமாம். ஒருவேளை இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி அச்சிடுவதால், உணவு பொருட்களை கஸ்டமர்கள் வாங்கும்போதே, சரியான முறையில் தேர்ந்தெடுத்து வாங்க முடியும்.. அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்.
பேக்கேஜிங்: பால், டீ, பிஸ்கட், சமையல் எண்ணெய், கோதுமை மாவு, குளிர்பானம், குடிநீர், குழந்தைகளுக்கான உணவு, பருப்பு வகைகள், தானியங்கள், சிமெண்ட் பை, பிரட் உள்ளிட்ட 19 வகையான பொருட்களை பேக்கேஜிங் செய்வதற்கான குறிப்பிட்ட அளவு என்ற விதிமுறைகளும் நீக்கப்பட்டிருப்பதால், உற்பத்தியாளர்கள் சந்தையில் விற்கும்அனைத்து பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களின் அளவை தீர்மானிக்க முழு சுதந்திரம் கிடைத்திருக்கிறது..
அனைத்து அளவுகளிலுமே பாக்கெட் செய்யப்பட்ட பொருட்கள் கிடைப்பதால் வாடிக்கையாளர்களும் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து பயனடையலாம் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications