புதுசாக வாங்கின கார், பைக் ரிஜிஸ்டர் செய்ய போறீங்களா? ஆர்டிஓ ஆபீஸில் நாளை முதல் புதிய விதி அமல்!
சென்னை: சொந்த பயன்பாட்டுக்காக வாங்கப்படும் புதிய வாகனங்களை பதிவு செய்ய (Registration) வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO- Regional Transport Office) கொண்டு வர தேவையில்லை. இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 150 க்கும் மேற்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (RTO Office) உள்ளன. இங்கு ஓட்டுநர் உரிமங்கள், நடத்துநர் உரிமங்கள், பழகுநர் உரிமம் (LLR), வாகன பதிவுகள், சாலை வரி செலுத்துதல் போன்ற பணிகள் செய்து தரப்படும்.

அது போல் யூனிட் அலுவலகங்களும் செயல்படுகின்றன. ஒரு அலுவலகத்தில் எத்தனை வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன, எத்தனை பேருக்கு உரிமங்கள் எடுக்கப்படுகின்றன என்பதை பொறுத்து ஒரு அலுவலகம் வட்டார போக்குவரத்து அலுவலகமாக செயல்படுமா யூனிட் அலுவலகமாக செயல்படுமா என்பது நிர்ணயிக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றில் சொந்த பயன்பாட்டிற்கு மட்டும் 4 ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
பொதுவாக இரு சக்கர வாகனம், கார், பஸ், லாரி என எதுவாக இருந்தாலும் பதிவு செய்ய வாகனங்களை நாம் வசிக்கும் முகவரிக்குள்பட்ட ஆர்டிஓ அலுவலகத்திற்கோ பகுதி அலுவலகத்திற்கோ (unit office) கொண்டு செல்ல வேண்டும்.
உரிமையாளர்களும் கொண்டு செல்லலாம். இல்லாவிட்டால் வாகன டீலர்களே அலுவலகத்திற்கு கொண்டு போய் பதிவு செய்துவிட்டு பிறகு நாம் டெலிவரி எடுத்துக் கொள்ளவும் வழிவகை செய்கிறார்கள். நாம் கொண்டு சென்றாலும் சரி, அவர்களே கொண்டு சென்றாலும் சரி டீலர்கள், இதற்காக தனிக் கட்டணம் வசூலிக்கிறார்கள்.
மோட்டார் வாகன புதிய சட்டத் திருத்தத்தின்படி சொந்த பயன்பாட்டுக்கு வாகனங்கள் பதிவின் போது அவற்றை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு செல்ல தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நடைமுறை தமிழகத்தில் அமல்படுத்தப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் இந்த சட்டத் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து சொந்த பயன்பாட்டிற்கான இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட புதிய வாகனங்களை பதிவு செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேரில் கொண்டு வரத் தேவையில்லை.
இந்த புதிய உத்தரவை நாளை முதல் அமல்படுத்த வேண்டும் என, அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும் தமிழக போக்குவரத்து துறை ஆணையர் கஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார். எனினும், வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களைப் பதிவின்போது கட்டாயம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications