புத்தாண்டு இரவில் சென்னை மெரினா கலைஞர் நினைவிடத்துக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: 2026 பிறந்த நிலையில் நாடு முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு தினத்தையொட்டி இன்று இரவு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், அங்கு குழுமியிருந்த பொதுமக்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்தைப் பரிமாறிக் கொண்டார். அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் சென்றனர். இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தலைவர் கலைஞரின் நினைவுகளோடு புத்தாண்டு இரவில்..." எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட புத்தாண்டு வாழ்த்துப் பதிவில், "உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். ஒரு கையில் வாளேந்தி உரிமை காத்தும், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலன் காத்தும், ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026.
புத்தாண்டுத் தொடக்கம் முதலே 'சமத்துவம் பொங்கட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!' எனக் கோலமிட்டு திராவிடப் பொங்கல் களைகட்டட்டும். உடன்பிறப்புகள் நடத்தும் விளையாட்டுப் போட்டிகள், கலை, இலக்கிய நிகழ்வுகள் என திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்" எனத் தெரிவித்திருந்தார்.
இன்று காலை திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்கள் புத்தாண்டு வாழ்த்தைப் பரிமாறிக்கொண்டனர். பலரும், முதல்வர் ஸ்டாலினுக்கு புத்தகங்களை பரிசாக அளித்தனர்.












Click it and Unblock the Notifications