ரத்த வாடை போகலை..குப்பை தொட்டியில் குவா குவா சத்தம்! அம்மா, பாட்டியின் அபாண்ட வேலை! சில்லிட்ட சென்னை
சென்னை: சென்னை அருகே கல்லூரி மாணவி ஒருவருக்கு வீட்டிலேயே பிரசவம் நடந்திருக்கிறது. பிறந்த சில நிமிடங்களிலேயே தொப்புள் கொடியுடன் பெண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்று இருக்கிறார். அந்த மாணவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் மாணவியின் தாயே பிரசவம் பார்த்தது தெரியவந்துள்ளது.
சென்னை அருகே மாடம்பாக்கத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகரித்து காணப்படும் பகுதி தான் பாலாஜி நகர். அந்த மெயின் ரோட்டின் குப்பை தொட்டியில் இருந்து தான் இன்று காலை பச்சிளம் குழந்தை ஒன்று அழுவது போல் சத்தம் கேட்டிருக்கிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் குப்பைத் தொட்டியில் பார்த்த போது வர்ணிக்க முடியாத சோகம் ஏற்பட்டது. உடலில் ரத்த கறையுடன் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் பச்சிளம் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது.
அந்த சிறு குழந்தையின் உடல் முழுவதும் எறும்புகளும் கடித்துக் கொண்டிருந்ததால் வலி தாங்க முடியாமல் அந்த பச்சிளம் பிஞ்சு கதறி துடித்தது. இதை அடுத்து அந்த பகுதி மக்கள் உடனடியாக குரோம்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அழுது துடித்துக் கொண்டிருந்த குழந்தையை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் உடல் நலன் சீராக இருக்கும் நிலையில் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற கல் நெஞ்சம் கொண்ட தாய் யார் என்பது குறித்து போலீசார் விசாரணையில் இறங்கினர். தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போதுதான் அந்த இளம் பெண்ணின் அடையாளம் தெரிய வந்தது. பெற்ற குழந்தையை தொப்புள் கொடிய கூட அறுக்காமல் குப்பை தொட்டியில் வீசி சென்றது அதே பகுதியைச் சேர்ந்த சுமார் 20 வயதுடைய பெண் என்பது தெரியவந்தது.
குழந்தை கிடைத்த நேரத்திலிருந்து சுமார் ஆறு மணி நேரத்திற்கு முன்னதாக அந்த பெண் குழந்தையை கட்டைப் பையில் போட்டு வந்து குப்பை கிடங்கில் போட்டு இருக்கிறார். தற்போது அவர் சென்னையின் பிரபலமான தனியார் கல்லூரியில் ஒன்றில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது. தொடர்ந்து அந்த மாணவி குறித்து விசாரணை நடத்திய நிலையில் மாணவிக்கு அவரது தாயார் தான் வீட்டில் பிரசவமும் பார்த்திருக்கிறார்.
தற்போது அந்த மாணவி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தைக்கும் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முறையற்ற உறவு காரணமாக அந்த பெண் கர்ப்பம் தரித்ததும் வெளியே தெரிந்தால் அவமானம் என கருதிய தாயே அவருக்கு பிரசவம் பார்த்து பேரக் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிவிட்டு வருமாறு அனுப்பியதும் தெரிய வந்தது. தொடர்ந்து இது தொடர்பாக அந்த பெண்ணின் தாயிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications