கோவை கார் சிலிண்டர் வெடிப்பு : மேலும் 5 பேர் மீது துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது என்.ஐ.ஏ!
சென்னை : கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு துணை குற்றப்பத்திரிகையை சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
கோவை உக்கடத்தில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கார் வெடித்து ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபின் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது, வெடிபொருட்கள், சிலிண்டர் உட்பட பல பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கின் தீவிர தன்மை கருத்தில் கொண்டு வழக்கானது தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர் இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தில், சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் தொடர்புடைய 11 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்ததாக முகமது தல்கா, முகமது அசாரூதின், முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில், பிரோஸ் இஸ்மாயில், அப்சர் கான் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம், கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், உமர் ஃபாரூக், ஃபிரோஸ் கான், முகமது தௌபீக், ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய 5 பேர் மீது தற்போது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் பல்வேறு அமைப்புகள், பொது நிர்வாகம், காவல்துறை, நீதித்துறை உள்ளிட்டவற்றை குறிவைத்து, அதற்கு எதிராக போர் தொடுப்பதே இச்சதித்திட்டத்தின் நோக்கம் என குற்றப்பத்திரிகையில் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications