சென்னையில் நிறைவடைந்த என்ஐஏ சோதனை.. பென்டிரைவ், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.. 3 பேருக்கும் சம்மன்
சென்னை: சென்னையில் 3 இடங்களில் நடந்து வந்த தேசிய புலனாய்வு அமைப்பினரின் சோதனையானது நிறைவடைந்துள்ளது. இந்த சோதனைக்குள்ளாக்கப்பட்ட 3 பேர் வரும் 20ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கோவையில் கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு முன் நாள் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே காரில் ஜமேஷா முபின் என்பவர் காரில் வந்தார். காரில் யாரோ வெடிபொருட்களை கடத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து உஷாரான ஜமேஷா முபின் காரில் இருந்த சிலிண்டரை வெடிக்கச் செய்ததாக தெரிகிறது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தீபாவளி நாளன்று கூட்டநெரிசலை பயன்படுத்தி பெரிய உயிர் சேதத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என தெரிகிறது.
இந்த நிலையில் கோவை போலீஸார் விசாரணை நடத்தியதில் கோவை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அசாருதீன், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக் உள்ளிட்ட 11 பேர் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து 11 பேரையும் தேசிய புலனாய்வு துறை அமைப்பினர் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கோவை உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த முகமது இட்ரீஸ் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று மாலை கைது செய்தனர்.
சிலிண்டர் வெடிப்பில் 12 ஆவது நபராக கைதான இட்ரீஸை சென்னை அழைத்து வந்தனர். இவர் முபினின் நண்பர். இந்த நிலையில் இன்று காலை கோவையில் 23 இடங்களிலும் தென்காசியில் 1 இடத்திலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தினர். கைதானவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் இந்த சோதனை நடந்தது.
இதில் சென்னையில் மட்டும் 3 இடங்களில் சோதனை நடந்து முடிந்துள்ளது. சென்னை நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் புஹாரி என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அது போல் சென்னை திருவிக நகரில் காமராஜர் தெருவில் முஜ்புர் ரகுமான் வீட்டிலும், அயனாவரம் மயிலப்பன் தெருவில் ஜக்கிரியா என்பவர் வீட்டிலும் இந்த சோதனை நடந்து முடிந்துள்ளது.
இந்த சோதனையில் செல்போன்கள், பென்டிரைவ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது. இந்த நிலையில் முஜ்புர் ரகுமான், ஜக்கிரியா, புஹாரி ஆகியோர் வரும் 20 ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications