மின்துறைக்கு குட்நியூஸ்.. 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.. அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி அறிவிப்பு
சென்னை: மின்துறையில் 15,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் அறிவித்துள்ளார். மேலும், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், மின்வெட்டு மற்றும் மின்சார உள்கட்டமைப்பு பிரச்சனைகளை தீர்க்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மின்சாரத் துறையில் ஊழியர்கள் நியாயமாக கிடைக்க வேண்டிய ப்ரோமோஷனுக்காக சட்டப் போராட்டம் நடத்தி ஆர்டரை பெற வேண்டிய சூழ்நிலையை நாம் ஏன் உருவாக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் குறிப்பிட்ட கிரேடில் ப்ரோமோஷன் கிடைக்க வேண்டுமெனில் அது சரியான நேரத்தில் ஊழியர்களுக்கு கிடைக்கப் பெற வேண்டும்.

அதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டியது அரசுடைய கடமை. ஆனால், அதை செய்யத் தவறிவிட்டு விட்டு, தற்போது ஊழியர்கள் நீதிமன்றம் வரை சென்று போராடி ஆர்டர்களை வாங்கி வந்திருக்கின்றனர். அதற்குப் பிறகும் கூட ப்ரோமோஷன் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கவனத்துக்கு வந்தவுடன் ஆய்வு செய்யப்பட்டது. இதுபோன்று பல கிரேடிலும் பெண்டிங்குகள் உள்ளன.
2012 பேட்ஜில் 700க்கும் மேற்பட்டோர் பதவி உயர்வு பெறாமல் உள்ளனர். சீனியாரிட்டி பிரச்சனை அதில் உள்ளது என்று கூறியுள்ளனர். உடனடியாக, நீதிமன்றம் இறுதியாக அளித்த உத்தரவின்படி ஆர்டர்கள் வழங்கப்படும். மின் துறையில் தாமதமின்றி பதவி உயர்வு வழங்கப்படும். ஊழியர்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் அரசால் செய்யப்படும்.
பெரம்பூரில் ஒரு சில இடங்களில் 2 தெருவில் டிரான்ஸ்பார்மர் பிரச்சனை இருந்தது. அவை உடனடியாக சரி செய்யப்பட்டது. குழுக்கள் அமைத்து மின்வெட்டு பிரச்சனைகள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருகிறது. 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர்களில் 75 சதவீதம் 20 வருடத்திற்கு பழமையானவை. அவற்றில் பிரச்சனை வருவது இயல்புதான். அவை உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருகிறது.
துணை மின் நிலையங்கள் நிறைய தேவைப்படுகிறது. அதிகப்படியான லோடு வரும்போது சில இடங்களில் லோ வோல்டேஜ் பிரச்சனைகள் வருகின்றன. இவற்றையும் கணக்கெடுத்து வருகிறோம். பெண்டிங்கில் உள்ள பணிகளை எல்லாம் உடனடியாக முடிக்கச் சொல்லி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதற்கான நிதியையும் ஒதுக்க வேண்டியுள்ளது. எல்லா பிரச்சனைகளும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
மின்வாரியத் துறைக்கு 15,000 ஊழியர்கள் பணியமர்த்தப்பட வேண்டியுள்ளது. மின் துறையில் இன்று மட்டும் 300 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 15 வருடங்களாக காத்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பணியிட மாற்றங்கள் நேர்மையாக நடைபெறும். இதுமாதிரி பதவி உயர்வு 45 ஆண்டுகளில் நடந்ததில்லை.
தவெக அரசு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வை வழங்கி இருக்கிறது. மின்வெட்டு பிரச்சனைகளை சரிசெய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சில பகுதிகளில் வேண்டுமென்றே சிலர் பியூஸை எடுத்துச் செல்கின்றனர். அமைச்சராகி ஒரு மாதமாகிவிட்டது. ஒரு ரூபாய் கூட வாங்கியது இல்லை. இது மக்களுக்கான அரசு. மின்துறையில் உள்ள பிரச்சனைகள் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்னும் கொஞ்ச நாள் விட்டிருந்தால் மின் துறை தனியார் மயமாகி இருக்கும். இந்தத் துறை மிக சவாலான துறை. பதவியேற்கும்போது ரூ.1.5 லட்சம் கோடி மின் துறை கடன் என நினைத்தேன். ஆனால், ரூ. 2.5 லட்சம் கோடியாக கடன் உள்ளது. மின்துறைக்கு மொத்தம் 70 ஆயிரம் பணியாளர்கள் தேவை. மின் துறையில் 15 ஆயிரம் பேரை பணி அமர்த்தவுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications