Nirmala Sitharaman: ராஜ்யசபாவில் தப்பு தப்பா பேசிய கமல்! தமிழை பற்றி நான் அப்படி பேசவே இல்லை.. நிர்மலா சீதாராமன் கோபம்
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ் மொழியைப் பற்றி இழிவான சொற்களைப் பயன்படுத்தியதாக கமல்ஹாசன் நேற்று ராஜ்யசபாவில் பேசியிருந்தார். இந்த நிலையில் ராஜ்யசபாவில் தப்பு தப்பாக கமல்ஹாசன் பேசியுள்ளார், தமிழை பற்றி நான் அப்படி பேசவே இல்லை என்று நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகியுள்ளார். இவர் நேற்று தனது முதல் பேச்சை ராஜ்யசபாவில் நிகழ்த்தினார்.

ராஜ்யசபாவில் கமல்ஹாசன் பேச்சு
கமல்ஹாசன் பேசுகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ் படித்தால் பிச்சை எடுக்க கூட உதாவது என்று கூறியதாக விமர்சித்து அது தொடர்பாகவும் காட்டமாக பேசியிருந்தார். கமல்ஹாசன் பேசுகையில், "பிச்சைப் பாத்திரத்தில் இருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்துக்கு உதவாது என்று தெரிந்தவர் நீங்கள்.
நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகுதான் உங்கள் பிச்சை பாத்திரம் உருவாக்கப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்கிறீர்கள்.
பிச்சை எடுக்க உதவாது
ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே! தமிழ்... பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். தங்கச்சி ஓட்டையும் நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான்.
உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள்.
பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்று இது 'உம் வினை உம்மை சுடுக'. எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பம் வீட்டைச் சுடுக. 'வந்தீர் வென்றீர் செல்வீர்' இது உலக நியதி, அரசியல் நியதியும்கூட. வீழ்க" என்று பேசியிருந்தார்.
நிர்மலா சீதாராமன் விளக்கம்
கமல்ஹாசனின் இந்த விமர்சனத்தை கடுமையாக மறுத்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தான் ஒருபோதும் அப்படி பேசவில்லை என்றும் பெரியார் பேசியதை மேற்கோள் காட்டியதாகவும் கூறி அதற்கான வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
மாநிலங்களவையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ் மொழியைப் பற்றி இழிவான சொற்களைப் பயன்படுத்தியதாக கமல்ஹாசன் தவறான தகவலை தெரிவித்துள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றும் எந்தவொரு அடிப்படைச் சரிபார்ப்பும் இன்றி, அமைச்சரின் பெயரில் தவறான ஒரு கருத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளது.
வீடியோ வெளியிட்டு விளக்கம்
கடந்த 2025 மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்வில், ஈ.வெ. ராமசாமி நாயக்கர் அவர்களின் கூற்றையே தெளிவாக மேற்கோள் காட்டினார்; அது அவருடைய சொந்தக் கருத்து அல்ல. இது குறித்த வீடியோ ஆதாரத்திற்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களைத் தவறாக வழிநடத்தியதற்காகவும், கௌரவத்திற்குரிய மத்திய அமைச்சரின் பேச்சைத் திரித்துக் கூறியதற்காகவும் அந்தச் செய்தி நிறுவனம் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications