ஏரியில் சடலமாக மிதப்பேன்.. ப்ரெண்டுக்கு மெசேஜ் அனுப்பிய நிஷாந்த்.. 3 நாளுக்கு பின் ஏரியில் மீட்பு
ஏதாவது ஏரியில் சடலமாக மிதப்பேன் நண்பருக்கு இளைஞர் அனுப்பிய மெசேஜ்.. 3 நாளுக்கு பிறகு சென்னை போரூர் ஏரியில் உடல் மீட்கப்பட்டுள்ளது
சென்னை: ஏதாவது ஏரியில் சடலமாக மிதப்பேன் நண்பருக்கு நிஷாந்த் அனுப்பிய மெசேஜ்.. 3 நாளுக்கு பிறகு சென்னை போரூர் ஏரியில் உடல் மீட்கப்பட்டுள்ளது.என்ன நடந்தது என்பதை விவரமாக பார்க்கலாம்.
இளம் பெண்ணை காதலித்து ரூ.68லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர் நிஷாந்த் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது உடல் தான் போரூர் ஏரில் இன்று மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
கடந்த வாரம் சென்னை மதுரவாயல் மகளிர் காவல் நிலையத்தில் 27வயதாகும் ஒருவர் தனது வழக்கறிஞர்களுடன் சென்று பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் அவர் கூறியிருந்ததாவது: நான் 10ம் வகுப்பு படிக்கும் போது எனக்கு நிஷாந்த் என்ற ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை காதலிப்பதாக கூறினார். இருவரும் பள்ளியில் படிக்கும் போதே காதலிக்க தொடங்கிவிட்டோம். அதன் பின்னர் கல்லூரியில் படிக்க தொடங்கிய பின்னரும் எங்கள் காதல் தொடர்ந்தது.

பணம் மோசடி
என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை என்னிடம் தவறாக நடந்து கொண்டார். எனது பூர்வீக சொத்தை விற்று வந்த பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கேட்டு வாங்கினார். இப்படியாக என்னிடம் ரூ.68 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டார். ஆனால் என்னை திருமணம் செய்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார். நான் பலமுறை கேட்டும் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்தார்.

நடவடிக்கை எடுங்கள்
என்ன காரணம் என்று நான் விசாரித்த போது, என்னிடம் பணத்தை ஏமாற்றிய நிஷாந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முக்கியப் பொறுப்பில் உள்ள நபரின் மகளை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற தகவல் கிடைத்தது. எனவே என்னை காதலித்து தவறாக நடந்து கொண்டுவிட்டு, ரூ.68 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றிய காதலன் நிஷாந்த் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.

போலீசில் புகார்
இந்த புகாரின் பேரில் மதுரவாயல் அனைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே கடந்த 3ம் தேதி வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அதை நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது காதலி புகார் அளித்தார்.

தீவிரம் ஏன்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் அப்போது கூறுகையில், "சிறுவயதில் இருந்து காதலிப்பதாக கூறி பெண்ணை ஏமாற்றி உள்ளார்.வேறுவொரு பெண்ணை திருமணம்செய்து கொள்ளப்போவதாக கூறியிருக்கிறார். பல லட்சம் பணத்தை வாங்கி மோசடி செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். எந்த பெண்ணிற்கும் இந்த நிலை வரக்கூடாது என்பதற்காக இந்த வழக்கில் நாங்கள் தீவிரமாக உள்ளோம்" என அவர் கூறினார்.

குதித்த காதலன்
இந்த புகாரை அடுத்து நிஷாந்த்தின் திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார், போக்கோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடிவந்தனர். இதனால் மனஉளைச்சலில் இருந்த நிஷாந்த், கடந்த மூன்று நாட்களுக்கு நண்பர்களுக்கு ஏரியில் மிதப்பேன் என வாட்ஸ் அப் இல் மெசேஜ் அனுப்பி உள்ளார். அத்துடன் போரூர் ஏரியில் குதிக்க போவதாக கூறியிருக்கிறார். அதன்படி நிஷாந்த் போரூர் ஏரியில் குதித்துவிட்டார்

இளைஞர் உடல் மீட்பு
இதையடுத்து விருகம்பாக்கம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து பாலசந்திரன் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நிஷாந்தின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் நீண்ட நேரம் தேடியும் உடல் கிடைக்காத நிலையில் தேடும் பணியை காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் நிறுத்தினார்கள். இந்நிலையில் 3 நாட்களுக்கு பின் அழுகிய நிலையில் நிஷாந்தின் உடல் போரூர் ஏரியில் மிதப்பதை கண்டனர். இதையடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த உடல் நிஷாந்தின் உடல் தான் என்பதை உறுதி செய்துள்ளனர். காதலியை மோசடி செய்ததாக தேடப்பட்ட காதலன் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். அல்லது icallக்கு (Free · Confidential · Hours: 10:00 am to 8:00 pm, Monday to Saturday) 091529 87821 என்ற எண்ணில் அழையுங்கள்.












Click it and Unblock the Notifications