நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை வேண்டாம்! போலீசுக்கு திரிஷா வைத்த கோரிக்கை.. ஏன் தெரியுமா?
சென்னை: தன்னை பற்றி கொச்சையாக பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என சென்னை போலீசாருக்கு நடிகை திரிஷா கோரிக்கை வைத்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ. இதில் நடிகை திரிஷா, மன்சூர் அலிகான் நடித்து இருந்தனர். திரைப்படம் வெளியான நிலையில் நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் அளித்த பேட்டி சர்ச்சையானது.

அதாவது, ‛‛லியோ படத்தில் பெட்ரூம் காட்சி மிஸ் ஆகிவிட்டது. குஷ்பு, ரோஜாவை மெத்தையில் போட்டதுபோல் திரிஷாவை போட முடியவில்லை" என கொச்சையாக பேசியிருந்தார்.
இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகானை நடிகை திரிஷா காட்டமாக விமர்சனம் செய்தார். அதோடு அவருடன் இனி சேர்ந்து நடிப்பது இல்லை என அவர் கூறியிருந்தார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் தேசிய மகளிர் ஆணையம் வரை சென்றது.
மன்சூர் அலிகான் பேசியது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் சார்பில் சென்னை போலீசாருக்கு உத்தரவு வந்தது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரித்தனர்.
இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கோரினார். இதற்கிடையே தான் சென்னை ஆயிரம் விளக்கும் மகளிர் காவல்துறை சார்பில் நடிகை திரிஷாவிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதப்பட்டது. அதில் மன்சூர் அலிகான் விவகாரத்தில் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க போலீசார் அறிவுரை வழங்கி இருந்தனர்.
போலீசாரின் இந்த கடிதத்துக்கு நடிகை திரிஷா பதிலளித்துள்ளார். அதில் நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சு தொடர்பாக மன்னிப்பு கேட்டுவிட்டார். இதனால் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என நடிகை திரிஷா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலம் இந்த பிரச்சனையில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் மீது மேல்நடவடிக்கை பாய வாய்ப்பில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications