பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்!
சென்னை: "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள சுமார் 7000 பெட்ரோல் பங்க்குகளில் 21 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு இருக்கிறது. எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விநியோகமும் கட்டுப்பாடுகள் இன்றி சீராக உள்ளது. பொதுமக்கள் பயத்தில் அதிகளவில் வாங்கிச் செல்வதால்தான் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாடு உருவாகிறது" என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக கடந்த சில நாட்களாக கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு வரக்கூடும் என்ற வதந்தி பரவியது. 3 நாட்களுக்கு பெட்ரோல் கிடைக்காது என சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதனால் அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் தங்களது டூவீலர், கார்களுடன் பெட்ரோல் பங்குகளுக்கு படையெடுத்தனர்.

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பெட்ரோல் பங்குகளில் நேற்று நள்ளிரவு வரை கூட்டம் அலைமோதியது. இன்று காலையிலும் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்ப காத்திருந்தன. வழக்கமாக 100 ரூபாய், 200 ரூபாய்க்கு பெட்ரோல் போடுபவர்கள் கூட ஃபுல் டேங் பெட்ரோல் நிரப்பிச் சென்றனர்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் முன்கூட்டியே பெட்ரோல், டீசல் வாங்கி வைத்துக் கொள்வதாக பொதுமக்கள் பலரும் தெரிவித்துள்ளனர். தினசரி வேலைகள், அலுவலகப் பயணம் மற்றும் அவசர தேவைகளுக்கு வாகனங்கள் அவசியமாக இருப்பதால் எந்தவித சிக்கலும் ஏற்படாமல் இருக்கவே இப்படி முன்கூட்டியே எரிபொருள் நிரப்பிக் கொள்கிறோம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களில் ஃபுல் டேங்க் நிரப்பியதோடு மட்டுமல்லாமல், குடங்கள், கேன்களிலும் பலர் பெட்ரோல், டீசல் வாங்கிச் சென்றனர். அதேசமயம், போதுமான அளவு எண்ணெய் கையிருப்பு இருப்பதால் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்க நிர்வாகி முரளி கூறுகையில், பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் இல்லை எனவும் பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல் டீசல் இருப்பதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழல் உருவாகவில்லை என கூறியுள்ளார்.
எனவே மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள சுமார் 7000 பெட்ரோல் பங்க்குகளில் 21 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு இருக்கிறது. எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விநியோகமும் கட்டுப்பாடுகள் இன்றி சீராக உள்ளது. பொதுமக்கள் பயத்தில் அதிகளவில் வாங்கிச் செல்வதால்தான் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாடு உருவாகிறது என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications