டோல்கேட்டில் இனி வண்டியை நிறுத்த வேண்டாம்! நெமிலியில் வந்த புதிய வசதி.. எப்படி வேலை செய்யும்?
சென்னை: சென்னை - பெங்களூரு சாலையில் பயணம் செய்பவர்கள் சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் காத்திருக்கும் சிரமம் இனிமேல் குறையப்போகிறது. வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையாக நிற்பதை பார்க்க முடியும். அவசரமாக செல்ல வேண்டியவர்கள் கூட இந்த வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் இனி நெமிலி சுங்கச்சாவடியில் இந்த நிலை மாறப்போகிறது. வாகனத்தை நிறுத்தாமலேயே சுங்கக் கட்டணம் வசூலிக்கும் புதிய முறை அறிமுகமாகியுள்ளது. இது எப்படி வேலை செய்யும்? வாகன ஓட்டிகளுக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கும்?
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நெமிலி சுங்கச்சாவடியில் நவம்பர் 12-ம் தேதி நள்ளிரவு முதல் இந்தப் புதிய முறை நடைமுறைக்கு வந்துள்ளது.

நெமிலி சுங்கச்சாவடி
பொதுவாக சுங்கச்சாவடியை கடக்கும்போது வாகனத்தை நிறுத்தி, கட்டணம் செலுத்திய பிறகுதான் செல்ல முடியும். ஒரே நேரத்தில் அதிக வாகனங்கள் வந்துவிட்டால் நீண்ட வரிசை ஏற்படும். குறிப்பாக சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் வழியில் சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டிய நிலை பயண நேரத்தையும் பாதிக்கும்.
இந்த சிரமத்தை குறைக்கத்தான் இப்போது தடுப்புகள் இல்லாமல் தானாகக் கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வாகனங்கள் சுங்கச்சாவடியைக் கடக்கும்போது நிறுத்தப்பட வேண்டியதில்லை. தொடர்ந்து பயணம் செய்துகொண்டிருக்கும்போதே கட்டணம் வசூலாகிவிடும்.
கட்டணம் எப்படி?
இந்த புதிய முறையில் வாகனங்களின் முன்பக்கத்தில் ஒட்டப்பட்டிருக்கும் ஃபாஸ்டேக் அட்டையை அடையாளம் காணும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல், வாகனத்தின் பதிவு எண்ணை படம் பிடித்து அடையாளம் காணும் ஸ்பெஷல் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
ஒரு வாகனம் சுங்கச்சாவடியை கடக்கும்போது, அதிலுள்ள ஃபாஸ்டேக் அட்டையை கருவிகள் கண்டறியும். அதே நேரத்தில் கேமராக்கள் வாகனத்தின் பதிவு எண்ணையும் படம் பிடிக்கும். இந்த 2 விவரங்களும் உடனடியாக ஒப்பிட்டு பார்க்கப்படும்... அதன் பிறகு அந்த வாகனத்துடன் இணைக்கப்பட்டுள்ள கணக்கிலிருந்து சுங் கட்டணம் தானாகவே கழிக்கப்படும்.
இதனால் கட்டணம் செலுத்துவதற்காக வாகனத்தை நிறுத்தவோ, நீண்ட வரிசையில் காத்திருக்கவோ தேவையில்லை.,.. வாகன ஓட்டிகள் தொடர்ந்து தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம்.
இரண்டாவது இடம்
தமிழகத்தில் இந்தப புதிய கட்டண வசூல் முறையை அறிமுகப்படுத்திய இரண்டாவது சுங்கச்சாவடி நெமிலி. இதற்கு முன்பு செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் அக்டோபர் 1-ம் தேதி இந்த முறை நடைமுறைக்கு வந்தது.
இப்போது நெமிலியிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு வாலாஜா அருகே உள்ள சென்னசமுத்திரம் சுங்கச்சாவடியிலும் இந்த வசதியைக் கொண்டுவர தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டங்களுக்குப் பிறகு அங்கும் இந்த முறை நடைமுறைக்கு வரவுள்ளது.
நேரம் நிறையவே மிச்சம்
சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்கும்போது பயண நேரம் மட்டுமல்ல, எரிபொருளும் வீணாகிறது. குறிப்பாக நீண்ட தூரம் கார் ஓட்டி செல்பவர்கள், சரக்கு வாகன ஓட்டிகள் இந்தச் சிரமத்தை அடிக்கடி எதிர்கொள்கின்றனர்.
புதிய முறை நடைமுறைக்கு வருவதால் வாகனங்கள் வரிசையில் காத்திருக்கும் நேரம் குறையும். வாகனத்தை நிறுத்தி மீண்டும் இயக்க வேண்டிய நிலையும் குறைவதால் எரிபொருள் செலவும் மிச்சமாக வாய்ப்புள்ளது. இதனால் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையின் அளவும் குறையலாம்.
அடுத்த மாற்றம்
இதனிடையே, தாம்பரம், மதுரவாயல் வழியாக புழலை இணைக்கும் சென்னை புறவழிச்சாலையிலும் இதே முறையைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள சுங்கச்சாவடிகளை மாற்றி, வாகனங்கள் நிற்காமல் கட்டணம் வசூலிக்கும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்த பணிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விண்ணப்பங்களை கோரியுள்ளது.
இதனால் தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறையில் அடுத்தடுத்து மாற்றங்கள் வரவுள்ளன. தினமும் வேலைக்காகவும், தொழில் மற்றும் சொந்தக் காரணங்களுக்காகவும் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களுக்கு இந்த மாற்றம் பயனுள்ளதாக இருக்கும். சுங்கச்சாவடியில் காத்திருந்து பயண நேரத்தை வீணாக்கும் நிலை குறைந்தால், நீண்ட தூரப் பயணங்களும் சற்று எளிதாகும்..!!


Click it and Unblock the Notifications
