வாரிசு அரசியல் வாதம் இனி எடுபடாது? அழகிரி வீழ்ந்தது ஏன்? உதயநிதியை பவன் சீண்டுவது ஏன்?
சென்னை: உதயநிதிக்கும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்குமான உரசல் அரசியல் ரீதியாக இருவருக்கும் என்ன மாதிரியான பின்னடைவை ஏற்படுத்தும் என்பது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒரு விளக்கத்தை முன்வைத்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் அடங்கிப் போய் கிடந்த சனாதன சர்ச்சை சங்கை மீண்டும் எடுத்து ஊதி இருக்கிறார் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண். ஒரு பக்கம் சந்திரபாபு நாயுடு தனது அரசியல் எதிரியான ஜெகன்மோகன் ரெட்டியை அரசியல் ரீதியாகப் பழிவாங்க வேண்டி திருப்பதி லட்டில் மாட்டின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கு முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் தான் காரணம் என்றும் ஒரு பரபரப்பு புகாரை வைத்தார்.

நாயுடுவின் பேச்சு இந்திய அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஏழுமலையான் பக்தர்கள் மனத்தில் ஒரு பதற்றத்தை உண்டாக்கியது. உச்சநீதிமன்றம் வரை சென்ற இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி, சந்திரபாபு நாயுடுவின் கருத்தைக் கண்டித்தார். ஆதாரங்கள் வலுவாக இல்லை என்றும் கூறிய நீதிமன்றம், மதத்தை வைத்து அரசியல் செய்யவேண்டாம் என்றும் எச்சரித்திருந்தது. இப்போது பவன் லட்டு சர்ச்சையை ஒதுக்கி வைத்துவைத்து எப்போதோ முடிந்துபோன உதயநிதி சனாதன பேச்சைப் பற்றி திருப்பதி கூட்டத்தில் பவன் ஆவேசமாகப் பேசி இருக்கிறார். அவர், "சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று தமிழ்நாட்டில் உள்ள ஒருவர் சொல்கிறார். அவருக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். சனாதன தர்மத்தை அழிக்க முடியாது. அழிக்க நினைத்தால் நீங்கள்தான் அழிந்துவிடுவீர்கள்" என்றும் எச்சரித்திருக்கிறார்.
இதற்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "okay, Let's wait and see" என்று ஒரே வரியில் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். லட்டு புயல் இப்போது ஆந்திராவைக் கடந்து தமிழ்நாட்டில் வந்து சனாதன தர்மம் எனப் பெயர் மாறி வீசத் தொடங்கி இருக்கிறது. இரண்டு மாநில துணை முதல்வர்களின் மோதலாக இதைப் பலரும் சுட்டிக் காட்டி பேசி வருகின்றனர்.
இதனால் அரசியல் ரீதியாக உதயநிதிக்கு ஏதேனும் பின்னடைவு ஏற்படுமா? பவன் கல்யாணுக்கு இதனால் பலன் ஏதேனும் கூடுதலாகக் கிடைக்குமா? இது பற்றி பேசி உள்ள அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, "பாஜக Vs திமுக என்ற மோதல் அரசியலைக் கட்டமைத்ததில் உதயநிதிக்கும் ஒரு பங்கு உண்டு. அந்த வகையில் பார்த்தால் உதயநிதியின் சனாதன எதிர்ப்பு என்பது வரவேற்கத்தக்கது. இந்தச் சனாதனம் என்பதைத் தமிழ்நாட்டில் புரிந்துகொண்டிருப்பது என்பது வேறு. அதே இந்திய அளவில் அதை வேறு கான்செப்டில் மக்கள் வேறு மாதிரி புரிந்து வைத்துள்ளனர். ஆகவே, பவன் கல்யாண் சனாதன கருத்தை ஜெகன்மோகன் ரெட்டியே ஆதரித்துப் பேசுகிறார். அவர் அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.
ஒருவேளை பவனுடன் ஜெகன்மோகன் சேர்ந்துவிட்டால் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று சந்திரபாபு நாயுடு அஞ்சுகிறார். எனவேதான் முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் ஒரே மாதிரியான இருக்கையைப் போடவேண்டும் என்று நாயுடு கூறினார். பவன் சமூகம்தான் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. பவன் அவருடைய அரசியல் சக்தியை வைத்து து.முதல்வராக வந்துள்ளார். ஆனால், ஸ்டாலினின் பலத்தால் உதயநிதி து.முதல்வராகி இருக்கிறார். இரண்டும் வேறு வேறு.

இந்த சனாதன பேச்சு பவன் கல்யாணுக்கு ஆந்திர அரசியல் களத்தில் லாபத்தைத் தரும். அதேபோல உதயநிதிக்கு இங்கே லாபம் தரும். தமிழக பாஜகவுக்குச் சின்ன லாபத்தைத் தரலாம். இதனால் பெரிய இழப்பு இருவருக்கும் வரப்போவதில்லை. உதயநிதியை துணை முதல்வராக உட்கார வைத்ததும் சிலர் எதிர்க்கிறார்கள். அவரை உட்காரவைக்கவில்லை என்றால் திமுக நல்லாட்சி தருகிறது என்று அவர்கள் யாரும் சொல்லப் போவதில்லை.
பீகாரில் தேஜஸ்வி யாதவ் வாரிசு அரசியல் என்றால் அங்கே யாதவர்கள் ஆதிக்கம் என்று ஒரு பின்னடைவை ஏற்படுத்தலாம். உபியில் அகிலேஷ் யாதவ் வாரிசு அரசியல் என்றால் அங்கே இந்தச் சமூகத்தின் ஆதிக்கம் என மக்கள் மனத்தில் ஒரு யோசனை வரக்கூடும். தமிழ்நாட்டில் உதயநிதியின் சமூகம் ஆதிக்க சாதியினர் இல்லை. எனவே பெரும்பான்மை சாதியினர் மத்தியில் இதனால் அச்சம் வரப்போவதில்லை.
திமுகவின் அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதி கட்சியைக் கைப்பற்றினார். அவர் ஒரு காலத்தில் வீரபாண்டி ஆறுமுகம்போன்ற வன்னிய தலைவர்களை அருகில் வைத்துக் கொண்டு பலத்தைக் காட்டினார். வீரபாண்டி ஆறுமுகம், செஞ்சி ராமச்சந்திரன் போன்றவர்கள் கருணாநிதியை எதிர்த்து கேள்வி எழுப்பும் அளவுக்குப் பலமாக இருந்தனர். இன்று அப்படி ஒரு கட்சிக்குள் ஸ்டாலின் இல்லை. அவர் தனது பலத்தில் மகனை உள்ளே கொண்டுவருகிறார். அதை எதிர்க்க அந்தக் கட்சிக்குள் யாருமே இல்லை. ஒன்மேன் லீடர்ஷிப்தான்.
ஸ்டாலின் ஒன்று வீழ்த்த முடியாத தலைவர் இல்லை. அவர் பலமான கூட்டணியினால் வெல்கிறார். அதிமுகவிடம் அப்படி ஒரு பலமான அணி இல்லை. ஒருவேளை பாஜக, அதிமுக, சீமான் மூவரும் சேர்ந்தால் திமுக கூட்டணியை வீழ்த்தலாம். இதில் விஜய்யை நான் சேர்க்கவில்லை. அவர் இப்போதுதான் கட்சியைப் பதிவு செய்துள்ளார். பவன் கல்யாண் போல அவர் வாக்கு வங்கியை நிரூபித்தால்தான் நாம் அவரைப் பற்றி ஒரு தேர்தல் கணக்குப் போட முடியும். எனவே அவரை தவிர்த்துவிட்டேன்.
திமுகவில் வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை மக்கள் புறக்கணித்துவிட்டனர். அதைப் பேசி பலன் இல்லை. 90களில் அதைக் கையில் எடுத்த வைகோ தோல்வியைச் சந்தித்துவிட்டார். அதன்பின்னர் அழகிரி மற்றும் ஸ்டாலின் எனப் போட்டி இருந்தது. அதில் அழகிரி தவறான கணக்கைப் போட்டு கருணாநிதியை எதிர்த்ததால், கட்சியில் அவர் காணாமல் போனார். ஸ்டாலினே அழகிரியைத் தோற்கடித்துவிட்டார். இனிமே திமுகவுக்குள் வாரிசு அரசியல் என்ற வாதம் எடுபடப் போவதில்லை" என்கிறார்












Click it and Unblock the Notifications