ஆறுதல்.. சென்னை மண்ணடி கட்டிட விபத்தில் யாருமே சிக்கல! நல்ல செய்தி சொன்ன அமைச்சர் கே.என்.நேரு
சென்னை: மண்ணடியில் 4 மாடி கட்டிட விபத்தில் இடிபாடுகளில் 4 பேர் சிக்கிக்கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அதில் யாரும் சிக்கவில்லை என நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்து இருக்கிறார். 60 ஆண்டுகள் பழமையான கட்டிடம் பராமரிப்பு பணியின்போது இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
சென்னையின் பழமையான பகுதிகளில் ஒன்றான மண்ணடியில் உள்ள அரண்மனைக்காரன் வீதியில் பழமையான 4 மாடிக் கட்டிடத்தை புணரமைக்கும் பணிகள் இன்று காலை நடைபெற்று உள்ளது. அப்போது கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர்களின் பெரும்பகுதியும் இடிந்து விழுந்தன.

விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறுகலான பாதையில் கட்டிடம் அமைந்து இருப்பதால் மீட்புப் பணியில் ஈடுபடுவதில் சிரமம் உள்ளதாக கூறப்படுகிறது. மீட்புப் பணிகளை மேலும் துரிதப்படுத்த தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அழைக்கப்பட்டனர். சென்னை அடையாறு மற்றும் அரக்கோணத்தில் இருந்து தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புப்படை மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறது.
சம்பவ இடத்திற்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் கட்டிட சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தீயணைப்பு துறை டிஜிபி கூறி உள்ளார்.
குறுகலான பாதை என்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். கட்டிடத்தின் உரிமையாளர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டனர்.
"இன்று காலை 10.47 மணியளவில் இந்த கட்டிடம் இடிந்து உள்ளது. சுமார் 60 ஆண்டுகள் பழமையாக கட்டிடம் இது. இந்த கட்டிடத்தில் சென்னை மாநகராட்சி, காவல்துறை, தீயணைப்புத்துறை, தேசிய பேரிடர் மீட்புபடை மூலம் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 15 கனரக வாகனங்கள், 6 ஜேபிசி இயந்திரங்கள், ஹிட்டாசி பொக்லைன் 2, ஒரு கிரேன், 4 ஆம்புலன்ஸுகள், 4 தீயணைப்பு எஞ்சின்களை கொண்டு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
22 பணியாளர்கள் மூலமாக 30 லாரிகளின் மூலமாக கட்டிட இடிபாடுகள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. மாநகராட்சி ஆணையர் இன்னும் 3 மணி நேரத்தில் முழுமையாக கட்டிட கழிவுகள் அகற்றப்படும் என்று சொல்லி இருக்கிறார். 2 பேர் காயமடைந்து உள்ளார்கள். அதில் மீட்புப் பணிக்கு வந்த எங்கள் பகுதி கழக செயலாளர் ராஜசேகருக்கு கையில் அடிபட்டு உள்ளது. காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து தேவையான உதவிகளை செய்வோம்.
கட்டிட இடிபாடுகளில் 4 பேர் சிக்கி இருப்பதாக கூறப்படுவது வதந்தி. அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேமரா வைத்து உள்ளார்கள். நாய் உள்ளே அனுப்பி உள்ளார்கள். உள்ளே எது இருந்தாலும் தெரியும் என்று சொல்லி இருக்கிறார்கள். எனவே அதெல்லாம் ஒன்றும் இல்லை. நல்லதே நினையுங்கள். நல்லதே நடக்கும். " என்றார்.












Click it and Unblock the Notifications