சிறிய மழைக்கே நீண்ட நேரம் பவர் கட்.. வாகனங்கள் செல்லவே லாயக்கற்ற சாலைகள்.. முடங்கிய மடிப்பாக்கம்
சென்னை : சென்னையில் மடிப்பாக்கம் பகுதியில் சிறிய மழைக்கே அடிக்கடி மின்சாரம் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே சாலைகள் வாகனங்கள் செல்ல சுத்தமாக லாயக்கற்ற நிலையில் இருக்கும் நிலையில், மின்சாரமும் இல்லாமல் போவதால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியான மடிப்பாக்கத்தில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன . பெருங்குடி மண்டலத்துக்குட்பட்ட மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் போன்றவை முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இதன் காரணமாக மடிப்பாக்கத்தின் பேருந்து நிலையம் தொடங்கி சுண்ணாம்பு கொளத்தூர் வரை உள்ள பெரியார் நகர், பெரியார் நகர் விரிவாக்கம், ராம்நகர் தெற்கு, எல் ஐ சி நகர், ராஜேஸ்வரி நகர், லட்சுமி நகர், இன்ஜினியர்ஸ் காலனி உள்ளிட்ட மடிப்பாக்கத்தின் தெற்கு பகுதிகள் முழுமையாக சாலைகளில் இல்லாமல் இருப்பதாக கூறுகிறார்கள் வாகன ஓட்டிகள். இந்த பகுதியில் உள்ள எல்லா சாலைகளுமே மிகவும் மோசமான நிலையில் பயன்படுத்த லாயக்கற்ற முறையில் இருக்கின்றன என்று வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகிறார்கள்
இந்த பகுதியில் பல்லாயிரம் மக்கள் குடியிருந்து வரும் நிலையில், விபத்தில் சிக்காமல் வாகனத்தை ஓட்டுவதை பெரும் சவாலாக உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். கார்கள் வைத்துள்ளார்கள் இந்த பகுதிகளில் ஆனதை எடுத்துச் செல்லவே இயலாத அளவிற்கு நிலைமை மோசம் அடைந்துள்ளதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள்.

சிறிய மழை வந்தாலும் முழுமையாக தண்ணீர் தேங்கி நின்று , தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் சாலைகளில் தான் தஞ்சம் அடைகிறது. ஆனால் வாகன ஓட்டிகள் சாலைகளில் பள்ளம் எது தண்ணீர் என்று தெரியாத அளவுக்கு அவதிப்படுகிறார்கள். சாலைகளில் பிரச்சனை இப்படி என்றால் மின்சாரமும் பெரும் சிக்கலாக மடிப்பாக்கம் பகுதியில் இருக்கிறது. சிறிய மலை வந்தாலும் , காற்று அடித்தாலும் மடிப்பாக்கம் பகுதியில் நீண்ட நேரம் மின்சாரம் நிறுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
அண்மையில் பெய்த மழையின் போது சுமார் 8 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் இல்லாமல் மடிப்பாக்கம் பகுதி மக்கள் அவதிப்பட்டார்கள். அதிகாலை தொடங்கி விடிய விடிய மின்சாரம் ரத்தான காரணத்தால் இரவு முழுவதும் தூங்க முடியாத நிலையில் இருந்தனர். இந்நிலையில் இன்று பிற்பகல் சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்த நிலையில், மழை பெய்ய தொடங்கும் முன்பே மின்சாரம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் மின்சாரம் வராததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மடிப்பாக்கத்தைப் பொறுத்தவரை சாலைகளும் வாகனங்கள் செல்ல லாயக்கற்ற நிலையில் உள்ள நிலையில், மின்சாரம் அடிக்கடி ரத்து ஆவது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications