2 நாளோடு ஓவர்! திமுக ஆட்சி என்றாலே மின்தடை என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் -செந்தில் பாலாஜி
சென்னை: திமுக ஆட்சி அமைந்தவுடன் மின் வெட்டு என்று மாய தோற்றத்தை சிலர் ஏற்படுத்தி வருகின்றனர் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று மின்சாரத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏக்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.
முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேசுகையில். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு தான் மின் வெட்டு அதிகரித்துள்ளது என்றார்.

நிலக்கரி
மேலும், போதுமான அளவிற்கு நிலக்கரி கையிருப்பு வைத்து கொள்வதற்கு தமிழக அரசு தவறிவிட்டது. இது தமிழ்நாடு அரசின் தவறு. அவர்களின் நிர்வாக குறைபாடு. நிர்வாக குறைபாடுகளால் தான் மின் வெட்டு நிலவி வருகிறது. மே மாதம் பொறுப்பேற்ற பின் மின் வெட்டு ஏற்பட்ட போது பராமரிப்பு காரணங்கள் என சொல்லப்பட்டது. அதன்பின் அணிலால் மின் வெட்டு என சொல்லப்பட்டது.

மீண்டும் மின்வெட்டு
இப்போது மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டு இருக்கிறது. இந்த முறை நிலக்கரி பற்றாகுறை என சொல்கிறது அரசு என்று தங்கமணி விமர்சனம் வைத்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வெட்டு என்ற மாய தோற்றத்தை உருவாக்குகின்றனர். போதுமான அளவு நிலக்கரியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்குவதில்லை.

மின்வெட்டு இல்லை
தமிழ்நாட்டில் 2 நாட்கள் மட்டுமே மின் வெட்டு இருந்தது. அந்த மின்வெட்டும் சரி செய்யப்பட்டுவிட்டது. திமுக ஆட்சி அமைந்தவுடன் மின் வெட்டு என்று மாய தோற்றத்தை சிலர் ஏற்படுத்தி வருகின்றனர் இப்போது சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது

பேச்சுக்கே இடம் இல்லை
முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் மின்வெட்டு மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை . இது போன்ற நிகழ்ச்சிகள் கடந்த ஆட்சியில் நடைபெறவில்லை என்று கூற வேண்டாம். 2016ல் இதே போன்ற சூழ்நிலை 5 முறை, 2017ல் 13 முறை, 2018ல் 16 முறை, 2019ல் 9 முறை, 2020ல் 8 முறை, 2021ல் 17 முறை என்று கடந்த ஆட்சியில் 68 முறை இப்படி நடந்துள்ளது. ஆனால் கடந்த ஓராண்டு ஆட்சி காலத்தில் ஒரே ஒரு முறைதான் இப்படி மின் தட்டுப்பாடு ஏற்பட்டு தடை ஏற்பட்டுள்ளது.

விளக்கம்
ஆனால் அதையே பெரிதாக்கி பேசுகிறார்கள். இனி மின்வெட்டே இருக்காது. இருந்த மின்வெட்டும் சரி செய்யப்பட்டுவிட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் மின் உற்பத்தியை இரட்டிப்பாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் அதிக முறை மின் தடை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 2018-ல் 59 மணி நேரம் 58 நிமிடங்கள் மின் தடை ஏற்பட்டது.
Recommended Video

அதிமுக மின்வெட்டு
2019-ல் 39 மணி நேரம் 20 நிமிடம் மின் தடை ஏற்பட்டது. 2020ல் 32மணி நேரம் 80 நிமிடம் மின் தடை ஏற்பட்டது. 2021ல் தொடர் மின் வெட்டு இருந்தது. நீங்கள் இரவில் கனவு கண்டாலும், பகலில் கனவு கண்டாலும் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் கீழ் மின் வெட்டு கண்டிப்பாக இருக்காது என்று செந்தில் பாலாஜி தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications