Vande Bharat Sleeper: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் இனி RAC இல்லை! 3000 கி.மீ.க்கு எவ்வளவு கட்டணம்?
சென்னை: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் இனி ஆர்.ஏ.சி. எனப்படும் பகுதியளவு இருக்கை உறுதி செய்யப்படும் டிக்கெட் வசதி இருக்காது, குறைந்தபட்ச கட்டணமாக மூன்றாம் வகுப்பு ஸ்லீப்பர் டிக்கெட்டுக்கு 960 ரூபாய் வசூலிக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் வந்தே பாரத் ரயில்கள், நவீன போக்குவரத்து வசதிகளின் அடையாளமாக உருவாகியுள்ளன. 'Train 18' என முதலிலே அறியப்பட்ட இவை, மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் பயணிக்கக்கூடிய திறன் கொண்டவை. 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்ட இந்த ரயில்கள் பயண நேரத்தைக் குறைத்து, சௌகரியமான பயண அனுபவத்தை வழங்குகின்றன.

2019 முதல் இயங்கி வரும் வந்தே பாரத் ரயில்களில், பயோ கழிப்பறைகள், தானியங்கி கதவுகள், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட அதிநவீன அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 16 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில்கள், தற்போது தமிழகத்தில் எட்டு வழித்தடங்களில் சென்னையிலிருந்து இயங்கி வருகின்றன. மைசூர், பெங்களூரு, விஜயவாடா, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை போன்ற முக்கிய நகரங்களை இவை இணைக்கின்றன.
முன்னதாக இருக்கை வசதிகளுடன் மட்டுமே இயக்கப்பட்டு வந்த வந்தே பாரத் ரயில்களில், தற்போது படுக்கை வசதியுடன் கூடிய புதிய ஸ்லீப்பர் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன் முதல் சேவையாக அசாமின் கவுகாத்தியில் இருந்து மேற்கு வங்கத்தின் ஹவுரா வரை அடுத்த வாரம் முதல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்த புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவைக்கான கட்டணம் குறித்து பயணிகளிடையே ஒருவித சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 400 கிலோமீட்டர் பயணத்திற்கான கட்டணம், ராஜ்தானி பிரீமியம் டிக்கெட்டுகளைவிட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 400 கிலோமீட்டர் பயணத்திற்கு ₹960 முதல் முதல், முதல் வகுப்பு ஏசி ஸ்லீப்பருக்கு ₹1,520 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1,000 கிலோமீட்டருக்கு அதிக தூர பயணங்களுக்கு மூன்றாம் வகுப்பு ஏசி கட்டணம் ரூ 2,500இல் இருந்தும், முதல் வகுப்பு ஏசி கட்டணம் ரூ 3,800இல் இருந்தும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், 2,000 கிலோமீட்டர் பயணங்களுக்கு மூன்றாம் வகுப்பு ஏசி டிக்கெட் ரூ.4,800இல் இருந்து தொடங்குவதாகவும், முதல் வகுப்பு டிக்கெட் ரூ.7,600 வரை நிர்ணயிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
3,000 கிலோமீட்டர் தூர பயணிகளுக்கு மூன்றாம் வகுப்பு ஏசி டிக்கெட் ரூ.7,200 ஆகவும், முதல் வகுப்பு ஏசி டிக்கெட் அதிகபட்சமாக ரூ.11,400 ஆகவும் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. வழக்கமாக ரயில்களில் உள்ள RAC (Reservation Against Cancellation) அல்லது வெயிட்டிங் லிஸ்ட் நடைமுறைகள் இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் இருக்காது. பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications