சின்ன 'சிம்டம்ஸ்' கூட வரல.. மார்ச்.2 வரை பொறுமை காப்போம்.. ஆதரவாளர்களிடம் சூசகமாக பேசிய ஓபிஎஸ்!
இபிஎஸ் அணியிடம் இருந்து எந்த சிம்டம்ஸ்-ம் வரவில்லை என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்த போதும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து ஒரு "சிம்டம்ஸ்"-ம் வரவில்லை என்று ஓ.பன்னீர் செல்வம் பேசியுள்ளார். அதேபோல், மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை வரை பொறுமையாக இருப்போம் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை காரணமாக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த இடைத்தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பினருமே வேட்பாளர்களை அறிவித்தனர். இரட்டை இலை சின்னம் கோரி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தை நாடினார். அதில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, பழனிசாமி நிறுத்திய வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டது.

ஓபிஎஸ் அடுத்தக்கட்ட நடவடிக்கை
இதற்கிடையில் ஓபிஎஸ் தனது வேட்பாளரைத் திரும்பப் பெற்று, இரட்டை இலைக்கு ஆதரவு அளிப்பதாகவும், பிரச்சாரம் செய்ய தயார் என்றும் அறிவித்தார். எனினும், அவரது தரப்பில் வழங்கப்பட்ட நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. இதனால் தேர்தலில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. அதேபோல் ஓபிஎஸ்-ன் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

கொந்தளித்த ஓபிஎஸ்
அதேபோல் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளரை திரும்பப் பெற்றதற்கு கூட எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து ஒரு நன்றி கூட சொல்லவில்லை. அப்போதும் ஓபிஎஸ் மீது எடப்பாடி பழனிசாமி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தது. இந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்கொள்வது குறித்தும் ஆதரவாளர்கள் கூட்டத்தை ஓபிஎஸ் கூட்டினார். இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் பேசுகையில், எடப்பாடி பழனிசாமியின் பெயரை கூட உச்சரிக்க விரும்பவில்லை என்று வெளிப்படையாக கொந்தளித்தார்.

பொறுமையாக இருப்போம்
அதுமட்டுமல்லாமல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றி ஓபிஎஸ் பேசுகையில், இந்த இடைத்தேர்தலில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் என்ற தீர்ப்பு வந்தபின், நமது வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்ததோடு, அதிமுக வெற்றிக்கு பாடுபடுவோம் என்று வாக்குறுதி அளித்தோம். அதற்கும் எந்த மரியாதையும் இல்லை. தற்போது ஓட்டு கேட்டு செல்லும் போது என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அது வரும் மார்ச் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெளிவரும் போது தெரியும். அதுவரை பொறுமையாக இருப்போம்.

சிம்டம்ஸ் கூட வரவில்லை
ஆனால் வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்தோம் என்று கூறிய போது கூட, சின்ன சிம்டம்ஸ் கூட வரவில்லை. அதன் மூலம், அவர்களின் பெருந்தன்மையை காட்டுகிறது. எந்த அளவிற்கு மனதில் கொடூரமான புத்தியை வைத்துக் கொண்டு, இந்த இயக்கத்தை தனது இரும்புப்பிடிக்குள் அடக்கிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதனை அதிமுக தொண்டர்கள் உடைத்தெறிவார்கள். அதிமுகவை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா காப்பாற்றும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications