விஜய்யின் ‘வீழ்ச்சி’யை கணித்துவிட்டார்களா மாஜிக்கள்? இசக்கி சுப்பையாவின் முடிவு உணர்த்தும் அபாய மணி
சென்னை: அதிமுகவிலிருந்து விலகி, தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் அரசியல் எதிர்காலம் தற்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், அம்பாசமுத்திரம் முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா தரப்பில் வைக்கப்பட்ட திடீர் கோரிக்கை ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தான் அளித்த ராஜினாமா கடிதத்தைத் திரும்பப் பெற சபாநாயகரிடம் மனு அளித்திருப்பதாகவும், அதனை ஏற்பதற்கான கூடுதல் மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் இசக்கி சுப்பையா தரப்பு கோரியது. இந்த மனுவை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஏற்க மறுத்து, வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது. நீதிமன்றம் இதனை நிராகரித்திருந்தாலும், இந்த ஒரு நிகழ்வு தவெக கூடாரத்திற்குள் அரங்கேறி வரும் அரசியலையும், அங்கு சென்ற முன்னாள் எம்எல்ஏக்களின் மனக்குமுறலையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்களில், முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவரைத் தவிர மற்ற யாருக்கும் தவெக தலைமை மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்காது என்ற தகவல் தீவிரமாக உலவுகிறது. சொல்லப்போனால், அந்த இரு விஜயபாஸ்கர்களுக்கே கூட மீண்டும் சீட் உறுதியாகக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் கட்சியின் உள்விவகாரங்களை உற்றுநோக்குபவர்கள்.
புதிய ரத்தம், புதிய கட்டமைப்பு மற்றும் இளைஞர்களுக்கு முன்னுரிமை என்ற முழக்கத்தோடு களமிறங்கியுள்ள விஜய், ஏற்கெனவே நீண்டகாலம் மக்கள் பிரதிநிதிகளாக இருந்த பழைய அரசியல் முகங்களுக்கு மீண்டும் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் மிகுந்த தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. தங்கள் தொகுதிகளிலும் கட்சியிலும் பிடி நழுவுவதை உணர்ந்தே இசக்கி சுப்பையா சட்டப் போராட்டத்தின் மூலம் பழைய எம்.எல்.ஏ பதவியையாவது தக்கவைத்துக்கொள்ள முயன்றார் என்ற வாதம் வலுப்பெறுகிறது.
இதே நிலை நீடித்தால், இசக்கி சுப்பையாவைத் தொடர்ந்து ராஜினாமா செய்த மற்ற முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் இதேபோன்ற சட்ட அல்லது அரசியல் கோரிக்கைகளை முன்வைத்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதோடு இவர்கள்.. விஜய்யுடன் இருந்தால் எதிர்காலம் இல்லை.. விஜய் ஒன் டைம் வொண்டர்.. இனி அவருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்று நினைப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நகர்வுகளின் பின்னணியில் இரண்டு முக்கியமான யதார்த்தங்கள் தென்படுகின்றன:
முதலாவதாக, தவெகவை நம்பிப் பதவிகளைத் துறந்த இந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் எவரும் இப்போது அக்கட்சியை முழுமையாக நம்பத் தயாராக இல்லை. ஒருவேளை இடைத்தேர்தல் வருமானால், தவெக சார்பில் தங்களுக்கு சீட் கிடைக்க வாய்ப்பில்லை என்பதும், ஒருவேளை தீவிர முட்டுக்கட்டைகளுக்குப் பிறகு வாய்ப்புக் கிடைத்தாலும் கூட தேர்தல் களத்தில் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்பதையும் அவர்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.
பாரம்பரிய வாக்கு வங்கிகளும், தீவிரமான பூத் கமிட்டி கட்டமைப்புகளும் இல்லாத ஒரு புதிய இயக்கத்தின் சின்னத்தில் நின்று திமுக அல்லது அதிமுக போன்ற பெருங்கட்சிகளை இடைத்தேர்தல் களத்தில் எதிர்கொள்வது எளிதல்ல என்ற பயம் அவர்கள் மத்தியில் பரவியுள்ளது.
இரண்டாவதாக, தமிழக அரசியல் களத்தில் தவெகவின் தொடக்கக் கால அதிர்வுகள் குறைந்து, கட்சியின் நடைமுறை பலவீனங்களை இவர்கள் துல்லியமாகக் கணிக்கத் தொடங்கிவிட்டனர் என்பதையும் இது உணர்த்துகிறது. ஆரவாரமான கூட்டங்களும், ரசிகர் பட்டாளமும் தேர்தல் வெற்றியாகவும் வாக்கு வங்கியாகவும் எல்லா நேரமும் மாறுவது சுலபமல்ல என்பதை அனுபவம் வாய்ந்த இந்தத் தேர்தல் அரசியல்வாதிகள் விரைவிலேயே புரிந்துகொண்டுவிட்டார்கள்.
அதேபோல் தவெகவில் தங்களுக்குப் போதிய அரசியல் கவசம் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றமும் இவர்களிடம் வெளிப்படத் தொடங்கியுள்ளது.
பதவியை விட்டுக்கொடுத்துவிட்டுப் புதிய கட்சியில் ஐக்கியமான தலைவர்கள், இப்போது இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இசக்கி சுப்பையாவின் திடீர் மனு வெறும் சட்ட நடவடிக்கை மட்டுமல்ல.. அது தவெகவை நம்பிச் சென்றவர்களின் அரசியல் ரீதியான அவநம்பிக்கையின் வெளிப்படையான சாட்சி.


Click it and Unblock the Notifications
