24 மணி நேரம் கால அவகாசம்.. திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்.. அண்ணாமலை சவால்
வட மாநில தொழிலாளர்கள் குறித்த அறிக்கை தொடர்பாக முடிந்தால் என்னை திமுக அரசு கைது செய்யட்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விடுக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: வட மாநில தொழிலாளர் விவகாரத்தில் அவதூறு பரப்பியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்த நிலையில், முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் கட்டுமான வேலை, ஓட்டலில் வேலை உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பாக திருப்பூர், கோவையில் உள்ள பனியன் நிறுவனங்களில் அதிக அளவில் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் சில இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் பரவின.

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்
குறிப்பாக பீகாரை சேர்ந்தவர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. இந்த விவகாரம் பீகார் மாநில சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. இதைத்தொடர்ந்து பீகார் அரசும், தமிழக அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது. இதைத்தொடர்ந்து, வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
இது தொடர்பாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "பீகார் மாநிலத்திலிருந்து வந்து இங்கு தொழில் செய்து கொண்டிருக்கக்கூடிய, பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய, தங்களுடைய குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழ்நாட்டை நோக்கி வந்துகொண்டிருக்கக்கூடிய சிலரை எப்படியாவது கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலமாக அரசியல் லாபம் தேட நினைக்கக்கூடியவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லுகிறேன்.

எந்தக் கொம்பனாக இருந்தாலும்
யார் சட்டம்-ஒழுங்கை கெடுக்கின்ற சூழ்நிலையில் ஈடுபட்டாலும் அவன் எந்தக் கொம்பனாக இருந்தாலும் அவனை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்! அடக்குவோம் என எச்சரித்திருந்தார். இந்த நிலையில் வட இந்திய தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்புதல், வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசார் இன்று காலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

4 பிரிவுகளில் வழக்கு பதிவு
தமது அறிக்கை மூலம் இரு பிரிவினரிடையே மோதல் உருவாக்க முயன்றதாகவும் அண்ணாமலை மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது, வதந்தி பரப்புதல், வன்முறையை தூண்டுதல், மதரீதியான மோதலை தூண்டுதல் உள்ளிட்டவைகளுக்காக மொத்தம் 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக வட இந்திய பத்திரிகைகள், உபி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திமுக அரசுக்கு தைரியம் இருந்தால்
இந்த நிலையில், அண்ணாமலை இன்று தனது ட்விட்டரில், திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும் என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டரில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:- வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

முடிந்தால் என் மீது கை வையுங்கள்
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும். பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications