அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்! வட இந்தியர்கள் பற்றி வதந்தி -ஓபிஇந்தியா சிஇஓ, ஆசிரியர் மீது வழக்கு
புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய வழக்கில் முன்ஜாமீன் கோரி பிரசாந்த் உம்ராவ் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் பாதுகாப்பாக இல்லை என்று பொய்யாக செய்தி பரப்பியதற்காக ஓபிஇந்தியா செய்தி நிறுவனத்தின் ராகுல் ரோஷன், நுபுர் சர்மா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் கடந்த சில நாட்களாக பொய்யாக பல வீடியோக்கள் வேகமாக பரவின. பீகாரில் இந்த வீடியோ பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது ஈரோடு, நாமக்கல், கோவையில் வேலை பார்க்கும் வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக பொய்யான செய்திகள் பரவி வருகின்றன.
பீகார் மாநில எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜகதான் இந்த விவகாரத்தில் முதலில் பிரச்னையை கிளப்பியது.

பீகார்
வட இந்தியர்களை தமிழர்கள் குறி வைத்து தாக்குவதாகவும், கொலை செய்வதாகவும் பொய்யான புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுகிறது என்று அம்மாநில சட்டசபையில் அமளி செய்தது. இதற்கு பொய்யான வீடியோக்களையும் ஆதாரமாக காட்டியது. இதனை தடுக்காமல் பீகார் மாநில அரசு, தமிழ்நாடு அரசுடன் கைகோர்த்து வேடிக்கை பார்க்கிறது என்றும் பொய்யான வீடியோக்களை பாஜக காட்டி அமளி செய்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் வட இந்தியர்கள், முக்கியமாக பீகார் மக்கள் தாக்கப்படுவதாக வைக்கப்படும் பொய்யான புகார்கள், வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.

நடவடிக்கை
இந்த இரண்டு வீடியோவில் ஒன்று, பீகார்-ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் மோதல் சம்பவம். அது இங்கே நடக்கவே இல்லை. மற்றொன்று தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்குள் நடத்திக்கொண்ட சண்டை. இதைத்தான் பொய்யாக தமிழ்நாடு சம்பவம் என்று இவர்கள் பரப்பி வருகிறார்கள். முக்கியமாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி தமிழ்நாடு வந்த நிலையில், அவருக்கு அழுத்த தர வேண்டும் என்று பாஜக சார்பாக அம்மாநில சட்டசபையில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக வதந்தி பரப்பிய நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பொய்யான செய்திகளை பரப்பிய பீகார் பாஜக நிர்வாகிகள் பிரசாந்த் உமாரா, தன்வீர் ஆகியோரை போலீசார் பிடிக்க டெல்லி விரைந்துள்ளனர்.

வழக்கு
புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய வழக்கில் முன்ஜாமீன் கோரி பிரசாந்த் உம்ராவ் மனு தாக்கல் செய்துள்ளார். இன்று டெல்லி ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் ஓபிஇந்தியா செய்தி நிறுவனத்தின் ராகுல் ரோஷன், நுபுர் சர்மா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநின்றவூர் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். ராகுல் ரோஷன் அந்த நிறுவனத்தின் சிஇஓ ஆவார். அதேபோல் நுபுர் சர்மா அதன் எடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி நிறுவனம் தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக பொய்யாக செய்தி வெளியிட்டதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. பொய்யான செய்திகளையும், வீடியோக்களையும் இவர்கள் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

வதந்தி
திமுக ஐடி விங் சார்பாக இந்த புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கலவரத்தை உண்டாக்கும் வகையில், மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இப்படி இவர்கள் செய்வதாக அவர் புகாரில் கூறி உள்ளார். இது போக வட இந்திய தொழிலாளர் குறித்து வதந்தி பரப்பிய ஜார்க்கண்ட் மனோஜ் யாதவிடம் சென்னையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் வதந்தியை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்ட செய்தி நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதோடு பொய்யாக அறிக்கை வெளியிட்டதாக அண்ணாமலை மீதும் வழக்கு பதியப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications