"முட்டாள் பசங்க".. வடமாநில தொழிலாளர்களை இங்கே கூட்டிட்டு வர்றது யார்னு தெரியுமா.. எச்.ராஜா ஒரே போடு
தமிழகத்தின் நிறுவனங்கள்தான் வடமாநில தொழிலாளர்களை இங்கு அழைத்து வருவதாக எச்.ராஜா குற்றம்சாட்டி உள்ளார்
சென்னை: வட மாநிலத்தவர்கள் தொடர்பான சர்ச்சைகளும், வதந்திகளும் தீயாக பரவிக் கொண்டிருக்கும் வேளையில், இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது, வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு அவர்களாக வரவில்லை எனக் கூறியிருக்கும் எச்.ராஜா, தமிழக நிறுவனங்கள்தான் அவர்களை அழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், வட மாநில தொழிலாளர்களையும், பாஜகவையும் இணைத்து நாம் தமிழர்கள் போன்ற கட்சிகள் முட்டாள்களை போல பேசி வருவதாகவும் அவர் சாடினார்.

அதிகரிக்கும் வடமாநிலத்தவர்கள்
ராஜஸ்தான், பீகார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பிழைப்பு தேடி தமிழ்நாட்டுக்கு வருவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. குறைந்த ஊதியத்துக்கு அதிக நேரம் இவர்களை வேலை வாங்க முடியும் என்பதால் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளும், கட்டுமான நிறுவனங்களும் இவர்களை அதிக அளவில் வேலைக்கு சேர்க்கிறது. குறிப்பாக, கோவை, ஈரோடு, திருப்பூர், சென்னை ஆகிய நகரங்களுக்குதான் இந்த வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் வருகின்றனர்.

புயலை கிளப்பிய பொய் பிரச்சாரம்
இதனிடையே, இவ்வாறு தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் உள்ளூர் மக்களால் தாக்கப்படுவதை போன்ற ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பபட்டு வருகின்றன. இதில் ஒன்றிரண்டு வீடியோக்களை தவிர மற்ற அனைத்தும் போலியானவை எனத் தெரியவந்துள்ளது. அந்த ஒன்றிரண்டு சம்பவங்களில் தொடர்புடையவர்களையும் போலீஸார் உடனடியாக கைது செய்துள்ளனர். ஆனால், இதுபோன்ற போலியான வீடியோக்கள் பரவுவதால் தமிழ்நாடு குறித்த தவறான புரிதல் மற்ற மாநில மக்களுக்கு ஏற்படுகிறது. பீகார் சட்டப்பேரவையில் இந்த விவகாரம் குறித்து காரசாரமாக விவாதம் நடக்கும் அளவுக்கு இது சென்றுள்ளது. மேலும், பீகார் தொழிலாளர்களின் நிலையை கண்டறிய அம்மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் குழு தமிழகம் வருகின்றனர்.

"தேச விரோதிகளின் கூடாரம்"
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது: முதலில் தமிழ்நாடு அமைதி பூங்கா எனக் கூறப்படுவதே பெரிய பொய். 19 இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகின்றன. கஞ்சா விற்பனை தலைவிரித்தாடுகிறது. நாளொன்றுக்கு ஒரு படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. லாக் அப் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு தேச விரோதிகளின் கூடாரமாக தமிழகம் விளங்குகிறது.

"நாடகம் எடுபடவில்லை"
இது ஒருபுறம் இருக்கட்டும். இப்போது வடமாநில தொழிலாளர்கள் விஷயத்துக்கு வருவோம். திருப்பூரில் என்ன நடந்தது? வட மாநில தொழிலாளர் குழுக்கள் இரண்டாக பிரிந்து சண்டை போட்டது. அதில் ஒரு விபத்தாக தமிழர் ஒருவர் இறந்து போனார். உடனே, வட மாநிலத்தவர் - தமிழர் இடையேயான பிரச்சினையாக இங்குள்ள சிலர் திரிக்க பார்த்தார்கள். 1960-களில் செய்ததை போல தமிழன் - வடக்கன் பிரச்சினையை போல இதை திசைதிருப்ப பார்த்தார்கள். ஆனால், அவர்களின் நாடகம் மக்களிடம் எடுபடவில்லை. இதை உணர்ந்ததும் தற்போது வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என தமிழக அரசு தெரிவிக்கிறது.

"சிறுபான்மையாக மாறுவார்கள்"
இதையெல்லாம் தாண்டி, இந்த பிரச்சினைக்கு அடிப்படை காரணம் என்ன? நம் வேலையை நாமே பார்க்க தமிழர்கள் தயாராக இல்லை. அப்படியென்றால், வட மாநில தொழிலாளர்கள்தான் இங்கு வருவார்கள். நான் சொல்வதை குறித்துக் கொள்ளுங்கள். இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தமிழ் பேசுவோர் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள். மதுவுக்கு பணம் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு தமிழன் வந்துவிட்டனர். இந்த சூழலை உருவாக்கியவர்கள் இந்த திராவிட இயக்கங்கள் தானே..

"முட்டாள்தனமான பேச்சு"
வட மாநிலத் தொழிலாளர்கள் அவர்களாக தமிழ்நாட்டுக்கு வரவில்லை என்பதை இங்குள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்கள்தான் அங்கு சென்று அவர்களை இங்கு அழைத்து வருகிறார்கள். ஏதோ தமிழ்நாட்டில் வாக்கு வங்கிக்காக பாஜகவினர் தான் வட மாநில தொழிலாளர்களை அழைத்து வருவதை போல சீமான் உள்ளிட்டோர் பேசி வருவது அவர்களுக்கே ஆபத்தாக மாறிவிடும். இது முட்டாள்தனமான பேச்சு. இவ்வாறு எச்.ராஜா கூறினார்.












Click it and Unblock the Notifications