KN நேரு மகனை எதிர்க்கும் அதிமுக Ex அமைச்சர்? எடப்பாடியின் அரசியல் கணக்கு! கிறுகிறுக்க வைக்கும் லாபி!
சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரை எதிர்த்து களம் காண ரெடியாகிவிட்டார் அதிமுக முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி.
ஏற்கனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட என்.ஆர்.சிவபதி திமுக வேட்பாளர் பாரிவேந்தரிடம் வெற்றியை பறிகொடுத்தார். ஆனால் இந்த முறை விட்டதை பிடிக்கும் வைராக்யத்துடன் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் இப்போதே ஃபீல்டு ஒர்க்கை தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது..

இதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி கொடுத்த சீட் கியாரண்டி தான் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதாவது அதிமுகவில் தனக்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்திருக்கிறார் என்.ஆர். சிவபதி. ஆனால் எடப்பாடி பழனிசாமி பதவி அவருக்கு வழங்கவில்லை. இதனால் கடந்த வாரம் அதிருப்தியுடன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த என்.ஆர்.சிவபதி, ''என்ன மாமா இப்படி பண்ணிட்டீங்களே'' என உரிமையோடு தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.
இதில் குறிப்பிட வேண்டிய கூடுதல் தகவல் என்னவென்றால், எடப்பாடி பழனிசாமியும், என்.ஆர்.சிவபதியும் இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக மாமா, மாப்பிள்ளை என உரிமையோடு பேசிகொள்ளக் கூடியவர்கள். சரி விஷயத்திற்கு வருவோம், ''மாவட்டச் செயலாளர் பதவியை விடுப்பா, நாடாளுமன்றத் தேர்தல் வரட்டும் எம்.பி. சீட் வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம்'' எனக் கூறி என்.ஆர்.சிவபதியை கூல் செய்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி காட்டிய பச்சைக்கொடியால் உற்சாகமாக ஊர் திரும்பிய சிவபதி, தேர்தல் வேலைகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டாராம்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அனுபவம் இருப்பதால் மீண்டும் இந்த முறையும் பெரம்பலூரிலேயே களம் காணும் திட்டத்தில் உள்ளார் சிவபதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை சீனியர் அமைச்சர்களில் ஒருவரான கே.என்.நேரு மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் களமிறங்குவார் எனத் தெரிவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பதோடு பெரம்பலூர் தொகுதி நட்சத்திர வேட்பாளர்களை கொண்ட தொகுதியாகவும் மாறவுள்ளது.
2011-2016 அதிமுக ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் சிவபதி.












Click it and Unblock the Notifications