அமெரிக்காவில் 2 கோடி சம்பளம் வாங்கிய NRI! இந்தியாவில் தலைகீழ நின்னாலும் வேலை கிடைக்கல.. என்ன பிரச்சனை?
அமெரிக்காவில் அதிகப்படியான சம்பளத்தில் வேலையில் இருந்த ஒரு இந்திய ஐடி ஊழியர், H-1B விசா லாட்டரியில் தேர்வாகாததால் அவருடைய வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. அமெரிக்காவில் அவருடைய காலம் முடிந்தது என திரும்பிய அவருக்கு அடுத்த பேரதிர்ச்சி.
ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட இவரது அனுபவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது மட்டும் அல்லாமல் ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவில் வேலை பார்க்கும் அனைவருக்கும் பயத்தை உருவாக்கியுள்ளது. காரணம் இந்தியாவில் தற்போது நிலவும் மோசமான வேலைவாய்ப்பு சந்தை.

H-1B விசா இல்லை, வேறு வழியுமில்லை
அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்த டெக் ஊழியரின் விசா காலாவதியான நிலையில், H-1B விசா விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் அந்த லாட்டரியில் அவர் தேர்வாகவில்லை. அவர் பணியாற்றி வந்த அமெரிக்க நிறுவனத்துக்கு இந்தியாவில் அலுவலகம் இல்லாததால், இடம் மாற்றம் செய்வதற்கான வாய்ப்பும் இல்லை, இதேபோல் இந்தியாவில் இருந்தபடியே வேலை செய்யும் வாய்ப்பும் இல்லை. இதனால், வேறு வழியின்றி தனது உடைமைகளை மூட்டை கட்டி இந்தியா திரும்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரூ.1.8 கோடி சம்பளம்
அமெரிக்காவில் ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் டாலர் தோராயமாக ரூ.1.8 கோடி சம்பளம் பெற்று வந்த இவருக்கு, இந்தியாவுக்கு திடீரென கிளம்பும் சூழ்நிலை ஏற்பட்டதால் தனிப்பட்ட முறையிலும் சரி குடும்பத்திலும் சரி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெரும் மன அழுத்ததுடன் இந்திய வந்ந இவருக்கு, முதலில் இருந்து இந்தியாவில் வேலை தேடும் நிலைக்கு வந்துள்ளார். தற்போது இந்திய வேலைவாய்ப்பு சந்தை குறிப்பாக டெக் துறை மிகப்பெரிய சவாலாக இருப்பதால் வேலை கிடைக்காமல் தடுமாறி வருகிறார் இந்த டெக்கி.
இந்தியா மிகவும் கடுமை
இந்தியாவில் தான் எதிர்கொண்ட நேர்முக தேர்வுகள் அமெரிக்காவில் இருந்ததைவிட மிகவும் கடினமானவை என்று அவர் விவரித்துள்ளார். கேள்விகள் மிக ஆழமானவையாகவும், எதிர்பார்ப்புகள் அதிகமாகவும் உள்ளன. அமெரிக்க அனுபவம் இருந்தால்போதும் வேலை எளிதாக கிடைத்துவிடும், ஆனால் இந்திய நிறுவனங்களின் நேர்முக தேர்வுகள் மிகவும் கடினமாக இருப்பதாலும், இதற்கு தான் தயாராகவில்லை என்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாக அவர் பகிர்ந்துள்ளார்.
40 லட்சம் கடன் அழுத்தம்
இந்த நிலையில் தனக்கு ரூ.40 லட்சம் அளவிலான வங்கிக் கடன் இருப்பதாகவும், வேலை இல்லாத நிலையில் கடனை எப்படி சமாளிப்பது என்ற கவலை மன நிம்மதியை பாதித்து வருவதாக அவர் வருத்தத்துடன் ரெட்டிட் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த டெக் ஊழியர் "Forced return to India (H1B not picked). Struggling with brutal tech interviews" என்ற தலைப்பில் ரெடிட்-ல் இவர் பகிர்ந்த பதிவு, பல இந்திய டெக் பணியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பலர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து, ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இந்தச் சம்பவம், H-1B விசா போன்ற தற்காலிக வேலைவாய்ப்பு மீதான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
வெளிநாட்டு கனவு
இந்திய ஐடி இளைஞர்கள் பலரும் கனவு காணும் அமெரிக்க வேலைவாய்ப்பு, உண்மையில் எவ்வளவு நிச்சயமற்றது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது. உயர் சம்பளம், வசதியான வாழ்க்கை என்ற கனவுகளுக்கு அப்பால், விசா லாட்டரி, கடன் அழுத்தம், வேலை இழப்பு போன்ற யதார்த்தங்கள் இன்றும் பலருக்கு சவாலாக உள்ளன.
இந்தியாவுக்கு திரும்பிய இந்த டெக்னி போன்ற பலருக்கு, தற்போது முக்கியமானது திறன் மேம்பாடு, பொறுமை மற்றும் புதிய வாய்ப்புகளை தேடும் முயற்சியே. இந்திய ஐடி துறையின் போட்டி அதிகரித்து வரும் சூழலில், இத்தகைய அனுபவங்கள் பலருக்கு பாடமாக அமையும்.














Click it and Unblock the Notifications