நீட் தேர்வு நடத்துவது தேசிய தேர்வு முகமை.. வழக்கில் ஆஜராவதோ மத்திய அரசு!
சென்னை: நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கில் ஏன் மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி வாதாடி வருகிறார்? தேசிய தேர்வு முகமை என்பது தனிப்பட்ட அமைப்புதானே அதற்கும் மத்திய அரசுக்கும் என்ன தொடர்பு என மூத்த பத்திரிகையாளர் கேள்வி எழுப்பி உள்ளார்.
நீட் தேர்வில் நடைபெற்ற பெற்ற முறைகேடு தொடர்பான வழக்கை சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் பார்வதிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது , வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் நேற்று தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். மேலும் 67 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றிருந்தது எப்படி என்றும், தேர்வு 20 லட்சம் மாணவர்கள் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி இருந்தார்.

தொடர்ந்து வினாத்தாள் எப்போது அச்சடிக்கப்படுகிறது, எப்படி விநியோகிக்கப்படுகிறது? எனபல்வேறு கேள்விகளை முன்வைத்த நீதிபதி சந்திரசூட். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்? முதல் தகவல் அறிக்கை எத்தனை பேர் மீது பதியப்பட்டுள்ளது? ஆகிய விவரங்களை எல்லாம் தேசிய தேர்வு முகமை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். மறுபடியும் இந்த வழக்கு வரும் 11 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில் இந்தத் தேர்வை நடத்துவதே மத்திய அரசு இல்லை. தேசிய தேர்வு முகமை என்பது தனிப்பட்ட அமைப்பு. அதன் மீதான முறைகேடுகளைத்தான் நீதி மன்றம் விசாரித்து வருகிறது. அப்படி உள்ள நிலையில், இந்த வழக்கில் ஏன் மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர் பங்கேற்று வாதிட்டு வருகிறார் என்ற ஒரு கேள்வியை மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் எழுப்பி உள்ளார். மேலும் அவர் பல்வேறு சந்தேகங்களை முன்வைத்துள்ளார்.
வழக்கு பற்றி ஷ்யாம், "இப்போதுதான் 'நீட்' தேர்வுத் தாள் கசிவு குறித்து விசாரணை தொடங்கி இருக்கிறது. இன்னும் பல நாட்கள் விசாரணை தொடரும் என்பதுதான் உண்மை. இப்போது ஏதோ முதல் முறையாக இந்தத் தேர்வுத் தாள் கசிவு நடைபெறவில்லை. பலமுறை சின்ன சின்ன அளவில் நடந்துள்ளது. மிகப்பெரிய அளவில் இப்போது நடந்துள்ளதால், இந்தளவுக்கு விவகாரம் நீதிமன்றம் அளவுக்குப் போய் உள்ளது.
இந்திய அளவில் நடைபெறும் எந்த வினாத் தாள் கசிவு சர்ச்சைகளில் ஒன்றில் கூட, தமிழ்நாடு பெயர் அடிபட்டதே இல்லை. தமிழகம் இதை மாதிரியான காரியங்களில் ஈடுபடுவதே இல்லை. வடமாநிலங்களில்தான் இது தொடர்ந்து நடந்துவருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதி என்ன மறுதேர்வு ஏன் வைக்கக் கூடாது என்று கேட்டுள்ளார். அப்படி என்றால் 28 லட்சம் பேரும் தேர்வு எழுத வேண்டும். அது அனைவரையும் பாதிக்குமே என்று விளக்கம் தந்துள்ளார்கள். அப்படி என்றால், யார் எல்லாம் வினாத் தாள் கசிவு விவகாரத்தில் பலன்பெற்றுள்ளனர் என்பதை அடையாளம் கண்டுவிட்டீர்களா?, பயனாளிகள் 100% கண்டுபிடிக்கப்பட்டுள்ளனரா? என்று நீதிபதி கேட்டுள்ளார்.
வெளிநாட்டில் எப்படி நீட் தேர்வு நடத்தப்பட்டது? வெளிநாடுகளுக்கு எப்படி வினாத் தாள் விநியோகம் செய்யப்பட்டது? என்று எல்லாம் நீதிபதி சந்திரசூட் கேட்டுள்ளார். அதன்பின்னர் தான் வெளிநாடுகளில் நீட் தேர்வு மையம் உள்ளது என்பதே நமக்குத் தெரியவந்துள்ளது. அப்படி என்றால், தாள் கசிவு வெளிநாட்டிலிருந்து ஏன் நடந்திருக்கக் கூடாது? இந்த மாதிரியான முடிச்சுகள் இப்போதுதான் அவிழ்க்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கின் போக்கைப் பார்க்கும்போது மீண்டும் மறுதேர்வு என்பது சாத்தியமில்லை என்றே தெரிகிறது? ஏனென்றால், ஒரு தேர்வர் 2 ஆயிரம் கட்டணம் கட்டுகிறார். இப்படி 28 லட்சம் பேர் கட்டியுள்ளனர். அப்படி என்றால் எத்தனை கோடி என நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்தத் தாள் கசிவு வழக்கில் மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜாரகி வாதடி வருகிறார். நீட் தேர்வை நடத்துவது அரசு அல்ல. தேசிய தேர்வு முகமைதான் நடத்துகிறது. அது சுயேச்சையான அமைப்பு. அது மத்திய அரசின் ஒரு அங்கம் இல்லை. அப்படி இல்லாத போது எப்படி மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கில் ஆஜராகிறார்? அதுவே புரியாத புதிராக உள்ளது.

தேசிய தேர்வு முகமை அமைப்பை சீர்திருத்தக் கஸ்தூரி ரங்கன் கமிட்டி போட்டுள்ளோம் என்று மத்திய அரசு வாதிட்டுள்ளது. அரசு சாரா அமைப்பை எப்படி அரசு கமிட்டி போட்டுச் சீர்திருத்த முடியும்? அதற்கு எப்படி அதிகாரம் கொடுக்கப்படும்? இந்தத் தனிப்பட்ட அமைப்பு நீட் தேர்வுக்காக இவ்வளவு பணத்தை வசூல் செய்து என்ன செய்கிறது? அதை யாருக்கு வழங்குகிறது? இந்த வினாத் தாள் கசிவு தொடர்பாகப் பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதில் ஒரு தரப்பு மறுதேர்வு வேண்டும் என வாதிடுகிறது.
இன்னொரு தரப்பு அதை வலியுறுத்தவில்லை. ஆகவே, அனைவரையும் ஒரு அணியாகக் கூடி ஒரு மனுவைத் தாக்கல் செய்ய சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார். ஆகவே அந்த பொது மனுவைத் தயாரிக்கத் தொடங்கி உள்ளனர். இதில் மறு தேர்வு வேண்டாம் என ஒரு தரப்பு வழக்குப் போட்டுள்ளது இல்லையா? அது கிட்டத்தட்ட மத்திய அரசின் ஏற்பாடு என்றே சந்தேகம் எழுகிறது" என்கிறார்.
இளநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பாகவே பீகார் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்தது. அதனையொட்டி ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் இதே மாதிரியான ஒரு புகார் எழுந்தது. அந்த விவகாரம் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications