மீளவே முடியவில்லை.. அமரன் படம் பார்த்து நெகிழ்ந்த சீமான்! சிவகார்த்திகேயனுக்கு ஸ்பெஷல் பாராட்டு
சென்னை: அமரன் படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, கமல்ஹாசன் ஆகியோரை பாராட்டினார். மேலும் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த சீமான் சிவகார்த்திகேயனை கட்டி அணைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும், கமல்ஹாசனை செல்போனில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய படம் அமரன். சிவகார்த்தியேன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம், தீபாவளிக்கு ரிலீசானது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

2014-ம் ஆண்டு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் உயிர் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அமரன் படத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி நேரில் சென்று பார்த்து பாராட்டுக்களை தெரிவித்தனர். இதேபோல, திரைப்பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் அமரன் படத்தை பாராட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று இந்த படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, கமல்ஹாசன் ஆகியோரை பாராட்டினார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த சீமான் சிவகார்த்திகேயனை கட்டி அணைத்து பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து சீமான் பேசியதாவது:-
அமரன் படத்தின் கடைசி 20 நிமிடம், அந்த நெகிழ்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை. இதயத்தை இறுகப்பிடித்துக்கொண்டது. இதில் இருந்து யாருமே மீள முடியாது. ஒரு ராணுவ வீரன். அந்த முகுந்தன் தான். இந்த வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. முகுந்தனாகவே என் தம்பியை பார்த்தேன். அவ்வளவு சிறப்பான நடிப்பு.

குறிப்பாக இயக்குனர் என் தம்பி ராஜ்குமாரின் சிறந்த படைப்பு இது. இவருக்கு இவ்வளவு திறமை இருக்கா என்று ஆச்சரியப்பட்டேன். ஒரு சிறு குறை கூட சொல்ல முடியாத அளவுக்கு மிகச்சிறந்த படைப்பை ராஜ்குமார் தம்பி செய்திருக்கிறார். சாய் பல்லவி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பார். இதிலும் சூப்பராக நடித்து இருக்கிறார். என் அண்ணன் கமல்ஹாசன் எத்தனையோ படத்தை தயாரித்து இருக்கிறார். இவர் தயாரித்ததில் ஆகச்சிறந்த படைப்பாக இந்த படத்தை நான் பார்க்கிறேன். இவ்வாறு சீமான் பேசினார்.
தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசனிடமும் செல்போனில் பாராட்டு தெரிவித்தார். கமல்ஹாசனிடம் சீமான் கூறுகையில், "படம் இப்போதான் பார்த்தேன். இதயத்தை பிடித்து இழுத்துக் கொண்டது. அழுகாமல், நெகிழாமல் யாரும் வெளியில் வரமுடியாது. அவ்வளவு சிறப்பான படைப்பாக இருக்கிறது என்று சீமான் பேசினார். இந்த பாராட்டு எல்லாம் இயக்குனருக்கு தான் என்று கமல்ஹாசன் கூறினார். மேலும் சீமானுக்கு ரொம்ப நன்றி நன்றி என்று கமல்ஹாசன் தெரிவித்துக்கொண்டார்.












Click it and Unblock the Notifications