தவெக தலைவர் விஜய்க்கு சீமான் பிறந்த நாள் வாழ்த்து.. சொன்ன அந்த வார்த்தையை நோட் பண்ணீங்களா
சென்னை: காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி வெற்றிகொள்ள முனைந்துள்ள, எனதருமை இளவல், எனது அன்புத்தளபதி, என்னுயிர்த் தம்பி விஜய்க்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் என்று சீமான் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார். கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி, கட்சி உள்கட்டமைப்புகளை வலுவாக்குவது என கட்சி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

இன்று விஜய்க்கு 50 வது பிறந்தநாள் ஆகும். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் பலியான நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என விஜய் அறிவுறுத்தியிருந்தார். மேலும், கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த விஜய், பிறந்த நாள் கொண்டாட்டம் எதுவும் வேண்டாம், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யுமாறு ரசிகர்களுக்கு வலியுறுத்தினார்.
இந்த நிலையில் இன்று அவருடைய பிறந்தநாளுக்கு நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் என பலரும் வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். சீமான் வெளியிட்டு இருக்கும் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்த்திரையுலகில் தன் திறமைமிக்க நடனம், உரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி, சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய ஆற்றலைப்பெருக்கி, ஆகச்சிறந்த நடிப்புத்திறனால் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் முதல் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் வரை அனைத்துத்தரப்பு மக்களின் மனங்களையும் வென்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு,
எல்லோரது நேசத்தையும் பெற்று உச்சம்தொட்டு உயர்ந்து நிற்கும் அன்புத்தம்பி! காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள, எனதருமை இளவல், எனது அன்புத்தளபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்,
என்னுயிர்த் தம்பி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!” என்று கூறியுள்ளார்.
விஜய் கட்சியின் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்பேன் என்று சீமான் கூறினார். விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க சீமான் ஆர்வம் காட்டி வரும் நிலையில், காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள விஜய் என சீமான் குறிப்பிட்டு வாழ்த்து செய்தி கூறியிருப்பது அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.
இதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் விஜய்க்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பொதுவாழ்வில் இணைந்துள்ள திரு. விஜய் அவர்கள், பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன். என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications