திமுக அரசுக்கு ‘நன்றி’ சொன்ன சீமான்.. தாமதமா வந்தாலும் மகிழ்ச்சி.. இதோட விடக்கூடாதாம்! ஓஹோ!
சென்னை : "தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போதே தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு புதிய சட்டத்திருத்த வரைவினை கொண்டு வந்து நிறைவேற்றியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தாமதமான நடவடிக்கை என்றபோதும், நாம் தமிழர் கட்சியின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற முனைந்துள்ள தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துகளும், நன்றியும்" என சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தேர்வு கட்டாயம் என்ற சட்டம் நேற்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சியின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற முனைந்துள்ள தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழில் கட்டாயம் தேர்ச்சி
2016ல் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில், "தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்டம் திருத்தம் செய்யப்பட்டு அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வில் தமிழில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மசோதா நிறைவேற்றம்
அரசுப் பணிகளில் சேர நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் போடப்பட்ட அரசாணையை செயல்படுத்தும் விதமாக இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இந்த தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் பேசிய நிலையில், இந்தச் சட்டம் ஒருமனதாக நிறைவேறியது.

சீமான் நன்றி
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போதே தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டுமென்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு புதிய சட்டத்திருத்த வரைவினை கொண்டு வந்து நிறைவேற்றியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தாமதமான நடவடிக்கை என்றபோதும், நாம் தமிழர் கட்சியின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற முனைந்துள்ள தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துகளும், நன்றியும்." எனத் தெரிவித்துள்ளார்.

உறுதி செய்ய வேண்டும்
மேலும், "சட்ட வரைவினை நிறைவேற்றியதோடு நின்றுவிடாமல், முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை தொடர்ச்சியாக ஆய்ந்தறிந்து, நடைமுறையில் சாத்தியப்படுத்துவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார் சீமான்.












Click it and Unblock the Notifications