பிரசாந்த் கிஷோருக்கு நன்றி சொன்ன சீமான்.. காசே வாங்காம நாடு முழுக்க கொண்டுபோய் சேர்த்திட்டீங்களே..!
தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கு நன்றி தெரிவித்துள்ளார் சீமான்.
சென்னை : இந்தியா முழுவதும் தன்னை அறிமுகப்படுத்தியதற்காக பிரசாந்த் கிஷோருக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
வட இந்திய தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக பொய்யாக வதந்தி பரவியது சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் சீமான், வட இந்திய தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக ஒரு வீடியோவை தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் ட்விட்டரில் பகிர்ந்து நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.
அதன்பேரில், சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பொது மேடையில் பேசியுள்ளார் சீமான்,

சீமான் சர்ச்சை பேச்சு
தேர்தல் வியூக வகுப்பாளரும், பிரபலமான ஐ-பேக் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது தொடர்பான வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் சீமான், "நான் ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்தில் வட இந்திய தொழிலாளர்கள் அனைவரும் பெட்டியைக் கட்டிக்கொண்டு போய்விடுவார்கள். எத்தனை பேரை எங்கு வச்சு வெளுப்பேன் என்று தெரியாது. பொய் வழக்குகளில் ஆயிரம் பேரை உள்ளே தூக்கிப்போட்டு அவர்களுக்கு சோறு போடாமல் அடி பிரித்தால் அவர்களாகவே தமிழ்நாட்டை விட்டுக் கிளம்பி விடுவார்கள்" எனப் பேசியிருந்தார்.

வழக்குப்பதிவு
பிரசாந்த் கிஷோர் இந்த வீடியோவைக் குறிப்பிட்டு "தமிழ்நாட்டில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறைக்கு அழைப்பு விடுப்பவர்கள் மீது நடவடிக்கை இல்லை. சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?" என ட்வீட்டரில் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து சீமான் மீது தேசிய ஒருமைப்பாட்டுக்கு களங்கம் விளைவித்தல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நீங்கள் பீகாரி நான் தமிழன்
இந்நிலையில், நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "வட இந்தியர்கள், இந்திக்காரர்கள் அதிகமாக தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். அதை முறைப்படுத்துங்கள் என்று தான் நான் பேசினேன். பிரசாந்த் கிசோர் உங்களை நான் பாராட்டுகிறேன். நீங்கள் பீகாரி. பீகாரிக்கு உண்மையாக இருக்கிறீர்கள். நான் தமிழன். அதுபோல் என் இனத்திற்கு உண்மையாக இருக்கிறேன்.

என்னை அச்சுறுத்தாதீர்கள்
நீங்கள் இப்படிப் பேசினால் கர்நாடகத்தில் இருக்கும் தமிழர்களை, ஆந்திராவில் இருக்கும் தமிழர்களை அடித்தால் என்ன செய்வீர்கள் எனக் கேட்பார்கள். அவர்கள் இதற்கு முன் அடித்தபோது என்ன செய்தீர்கள்? நீங்கள் தொட்டால் நானும் தொடுவேன். அவர்கள் ஒன்றேகால் கோடி பேருக்கும் மேல் இங்கு குடிபெயர்ந்துள்ளார்கள். நாம் சிறுகச் சிறுக நம் வேலைவாய்ப்பை இழப்பது மட்டுமல்ல. இன்று கூலியாக உள்ளவர்கள் நாளை முதலாளியாக மாறுவார்கள். நிலம் அவர்கள் கையில் போகும். நாம் நிலமற்ற அடிமைகளாவோம். இவை அனைத்தும் வரலாற்றெங்கிலும் நிகழ்ந்துள்ளது. அதை பார்க்கும்போது நமக்கு பயம் வருகிறது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.

தமிழர்களை அடிக்கிறார்கள்
வட இந்தியர்கள் வருகையை முறைப்படுத்துங்கள். வேலைக்கு வருபவர், எந்த மாநிலத்தில் இருந்து வருகிறார், எத்தனை நாட்கள் தங்குவார், எங்கு தங்குவார், என்ன வேலை செய்கிறார் என்பதை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களைக் கண்காணிக்க முடியும். நேற்று தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களர்கள் கைது செய்தபோது, வயிற்றுப்பசிக்கு தானே வந்தார்கள், ஏன் கைது செய்தீர்கள் என யாரும் கேட்கவில்லையே. நான் அடிவாங்கும்போது நன்முறையாக உள்ளது, மற்றவர்கள் அடிவாங்கும்போது உங்களுக்கு ஏன் வன்முறையாகத் தெரிகிறது? யார் அடித்தது? எந்த தமிழர் அடித்தது? அவர்கள் தான் தமிழர்களை அடிக்கிறார்கள்.

பி.கேவுக்கு நன்றி
உடனே வன்முறையைத் தூண்டுகிறார், 2 இங்களுக்கு இடையே பகையைத் தூண்டுகிறார் என என் மீது வழக்கு போடுகிறார்கள். ரூ. 400 கோடி வாங்கிவிட்டு திமுகவிற்கு வேலை செய்தவர் என்னிடம் 4 ரூபாய் கூட வாங்காமல் இந்தியா முழுவதும் சீமான் என்ற ஒருவர் இருக்கிறார் எனத் தெரியப்படுத்தியுள்ளார். இதற்காகவே பிரசாந்த் கிஷோருக்கு நன்றி சொல்ல வேண்டும்." எனப் பேசியுள்ளார் சீமான்.












Click it and Unblock the Notifications