சீமானுக்கு அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி.. நாதக நிலைப்பாடு என்ன? இடும்பாவனம் கார்த்தி விளக்கம்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி அழைப்பை நிராகரிப்பதாக நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி தெரிவித்துள்ளார். திமுகவுக்கு மாற்று அதிமுக அல்ல என்று கூறிய இடும்பாவனம் கார்த்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணிகளை நிறைவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராகப் பலமான ஒரு கூட்டணியைக் கட்டமைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இதற்காக "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" சுற்றுப்பயணத்தின் போது திமுக கூட்டணிக் கட்சிகளான விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் உள்ளிட்ட 3 கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

இந்த 3 கட்சிகளும் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை முற்றிலுமாக நிராகரித்தன. இந்த நிலையில் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள பேட்டியில், திமுகவை வீழ்த்துவதற்கு ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைவது அவசியம். இந்த கருத்து தவெகவுக்கும் பொருந்தும் என்று தெரிவித்தார். இதன் மூலமாக விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருக்கும் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கி நாம் தமிழர் கட்சி இதுவரை எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைக்கவில்லை. அதேபோல் தவெக தரப்பில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு கட்சிகளும் அதிமுகவுடன் இணையுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பு குறித்து நாதக வேட்பாளர் இடும்பாவனம் கார்த்தி பதில் அளித்துள்ளார்.
அதில் இடும்பாவனம் கார்த்தி பேசுகையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போதும் அதிமுக தரப்பில் இதேபோன்ற அழைப்பு விடுக்கப்பட்டது. சீமான் அப்போதே திட்டவட்டமாகத் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டார். திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பது 2010ல் நாதக தொடங்கப்பட்ட நாளில் எடுத்த முடிவு. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
அப்படிதான் நாதக கருதுகிறது. அதேபோல் தனித்துப் போட்டி என்பதையும் அறிவித்துவிட்டோம். விஜய் கூட்டணி அமைக்க முயற்சித்தார். வேறு வாய்ப்பு அமையாததால், தனித்துப் போட்டியிட உள்ளார். அவருக்கு பாஜக அல்லாத அதிமுகவுடன் செல்லலாம் என்ற எண்ணம் விஜய்க்கு இருக்கிறது. ஆனால் நாதகவை பொறுத்தவரை அப்படியல்ல. 2 திராவிடக் கட்சிகளும் தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத கட்சிகள்.
நாதக தனித்துப் போட்டி என்று முடிவு செய்துவிட்டு 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டோம். இந்த ஆண்டு இறுதிக்குள் வேட்பாளர்களை இறுதி செய்து, மாநாடு நடத்தி அறிவித்துவிட்டு பரப்புரையைத் தொடங்க உள்ளோம். அதனால் அதிமுகவின் அழைப்பை ஏற்கவில்லை. திமுகவுக்கு மாற்று அதிமுக அல்ல. அதிமுகவுக்கு மாற்று திமுக அல்ல.
திமுக சத்தமின்றி செய்து வரும் கொடுமைகளைக் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக சத்தமாகச் செய்தது. இதனால் இரு கட்சிகளின் நிர்வாகத் திறனும், கொள்கைகளும் ஒன்றுதான். அதனால் நாதக தனித்துப் போட்டி என்பது உறுதியான ஒன்று. எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை முற்றாக நிராகரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications