சிறுபான்மை மக்களின் வாக்குகள்.. தனி ரூட்டில் பயணிக்கும் சீமான்.. திமுகவுக்கு தலைவலியாக மாறும் நாதக!
சென்னை: தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுவதற்காக நாம் தமிழர் கட்சியின் சீமான் தனி ரூட்டில் பயணிக்க தொடங்கி இருக்கிறார். திருப்பரங்குன்றம் விவகாரத்தால் இஸ்லாமியர்களின் வாக்குகள் திமுகவுக்கு திரும்பிவிட்டதாக பார்க்கப்படும் சூழலில், நாதக தரப்பில் ஏராளமான இஸ்லாமியர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்கள் என்று சொல்லப்படும் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வாக்குகள் சுமார் 12 முதல் 15 சதவிகிதம் வரை உள்ளது. சுமார் 50 தொகுதிகளில் ஒரு கட்சியின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் அளவிற்கு பல்வேறு பகுதிகளிலும் அடர்த்தியாக வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் திமுக - காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு சிறுபான்மை மக்களின் ஆதரவு அதிகளவில் உள்ளது.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பதாலும், தமிழ்நாட்டில் திமுக இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பதாலும் அந்த அக்கள் இந்த கூட்டணிக்கு ஆதரவாக இருக்கின்றனர். அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்த போது, சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியை மறந்துவிட்டது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதற்கேற்ப சிஏஏ, வக்பு வாரிய திருத்த சட்டம் தொடங்கி திருப்பரங்குன்றம் விவகாரம் வரை பாஜக ஆதரவு நிலைப்பாட்டிலேயே அதிமுக இருந்து வருகிறது. இதனிடையே சிறுபான்மையினர் வாக்கு வங்கியை விஜய் பிரிப்பார் என்று கருதப்பட்ட போது, திருப்பரங்குன்றம் விவகாரம் மற்றும் கிறிஸ்துமஸ் விழாக்களில் வலதுசாரிகள் நடத்திய தாக்குதலை பற்றி தவெக கண்டுகொள்ளவே இல்லை.
இதனால் விஜய் மீதான நம்பிக்கையை சிறுபான்மை மக்கள் இழந்துவிட்டதாக விவரம் அறிந்தவர்கள் சொல்லுகின்றனர். கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரம்மாண்டமாக கிறிஸ்துமஸ் விழாக்களை நடத்திய போதும், தவெக சீனில் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறுபான்மை வாக்குகளை பெற தனி ரூட்டில் பயணித்து வருகிறார்.
சிஏஏ, வக்பு திருத்த சட்டம், திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்டவற்றில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக சீமான் பேசி இருந்தார். அதேபோல் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக போராட்டங்களிலும் ஈடுபட்டார். தற்போது நாதக சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் கணிசமானோர் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். நாதக 2ஆம் கட்டத் தலைவர்களில் இஸ்லாமிய பெண்களும் இடம்பெற்றுள்ளனர்.
இஸ்லாமிய பெண்களை சட்டசபைக்கு அனுப்புவோம் என்றும் சீமான் முழங்கி வருகிறார். தொடர்ச்சியாக நாதக மேடைகளில் இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் திமுகவுக்கு ஆதரவான சிறுபான்மை மக்கள் வாக்குகளை பிரிப்பதில் விஜய்யை காட்டிலும் சீமான் முன்னிலையில் இருப்பார் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications