ஓபிஎஸ் எரிமலை போன்றவர்.. எரிமலை உடனே வெடிக்காது.. மருது அழகுராஜ் சொன்ன விளக்கம்!
ஓபிஎஸ் எரிமலை போன்றவர் என்று மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஓபிஎஸ் எரிமலையை போன்றவர் என்றும், எரிமலை உடனே வெடிக்காது என்று மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள் என்று கூறிய அவர், அதிமுகவின் ஃபைனான்சியர் தான் இபிஎஸ் என்று விமர்சித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அதிமுக உட்கட்சி பூசல் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. அதேபோல் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கும் குறைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
பாஜக ஆதரவை பெற கமலாலயம் சென்றது, பின்னர் வேட்பாளரை அறிவித்தது, வேறு வழியின்றி வாபஸ் பெற்றது உள்ளிட்ட காரணங்களால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அமைதி காத்து வருகின்றனர்.

மருது அழகுராஜ் பேட்டி
இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட கூடாது என்பதற்காக ஓபிஎஸ் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுத்தார். இந்த பெருந்தன்மையை சிலர் கோழைத்தனம் என்று விமர்சிக்கிறார்கள். 2017ல் ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை முடிந்தது என்று எள்ளி நகையாடினார்கள். ஆனால் நான்கரை ஆண்டுகள் ஆட்சிக்கு ஓபிஎஸ் உதவி எடப்பாடி பழனிசாமிக்கு தேவைப்பட்டது.

இபிஎஸ் அரசியல்
ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கையில் பின்னடைவு, வீழ்ச்சி, தளர்ச்சி என்று எதுவும் இல்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் கடுமையான தண்டனையை கொடுப்பார்கள். ஆனால் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. இப்படியொரு குழப்பமான மனநிலைக்கு தொண்டர்கள் ஆளாகியுள்ளார். ஆனால் என் பெயரில் அதிமுகவை பட்டா போடுங்கள் என்று செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி அரசியல், மிக விரைவில் முடிவுக்கு வரப் போகிறது.

ஓபிஎஸ் ஒரு எரிமலை
தொண்டர்களின் உரிமையை மீட்பதற்காக தான் ஓபிஎஸ் போராடி வருகிறார். ஓபிஎஸ் பாணியில் மென்மைத்தனமும், அமைதியும் இருப்பதாக சிலர் கருதுகிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை எரிமலை உடனடியாக வெடிக்காது. புகைந்து கொண்டே இருக்கும். கடைசியில் வெடிக்கும் போது சேதாரம் பெரிதாக இருக்கும். ஓபிஎஸ் அமைதி பல செய்திகளை சொல்லி செல்கிறது. ஈரோடு மக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய தண்டனையை கொடுப்பார்கள்.

அதிமுகவின் ஃபைனான்சியர்
மார்ச் 2ம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு செய்தி கிடைக்கும். எடப்பாடி பழனிசாமியிடம் பொருளாதாரத்தை தவிர்த்து, வேறு எதுவும் கிடையாது. அதிமுகவின் ஃபைனான்சியர் எடப்பாடி பழனிசாமி. ஆனல் ஓபிஎஸ் ஃபைனான்சியராக இருக்க விரும்பவில்லை. இயக்கத்தின் தொண்டர்களுக்காக தான் ஒற்றுமையை வலியுறுத்தி வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் அரசியல் தவறு என்று அவருடன் இருப்பவர்களே சொல்கிறார்கள். அதிமுக பிளவுபட்டால், திமுக எளிதாக வெற்றிபெறும். வரலாற்றில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications