அதிமுகவுடன் இணையும் ஓபிஎஸ் அணி? சட்டசபையில் அடுத்தடுத்து ட்விஸ்ட்! கிரீன்சிக்னல் தரும் எடப்பாடி?
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தான் தமிழ்நாடு சட்டசபையில் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவம் ஓ பன்னீர் செல்வம் அணி விரைவில் அதிமுகவில் இணைகிறதா? என்ற கேள்வியை எழுப்பி
உள்ளது. இப்படியான சூழலில் இன்றும் ஒரு சம்பவம் நடந்தது.
அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி துணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டனர். ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவில் பொதுச்செயலாளராக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கு ஓ பன்னீர் செல்வம் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனியாக சேர்ந்து செயல்பட்டு வருகிறார்.
அதிமுகவில் மீண்டும் இணையும் முனைப்பில் ஓ பன்னீர் செல்வம் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் அவர்களை கட்சியில் இணைக்க ஆர்வம் காட்டவில்லை. இப்படியான சூழலில் தான் நேற்று முன்தினம் சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக கொண்டு வந்த போது அதை ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆதரித்தனர். சட்டசபை மட்டுமின்றி வெளியிலும் இருதரப்பும் எலியும், பூனையுமாக செயல்பட்டு வந்த நிலையல் ஓ பன்னீர் செல்வம் தரப்பு இந்த தீர்மானத்தை ஆதரவு தெரிவித்தது. குரல் வாக்கெடுப்பிலும், அதற்கு பிறகு நடந்த டிவிசன் வாக்கெடுப்பிலும் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவின் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
அதேபோல் கடன் விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுடன், எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு ஆதரவாக ஓ.பன்னீர் செல்வம் பேசினார். "கடன் வாங்குவது தவறு கிடையாது. வாங்கிய கடனை மூலதன செலவுதான் செய்ய வேண்டும். அந்த நியதியை நீங்கள் கடைபிடித்தீர்களா? வாங்கிய கடனை நீங்கள் சரியாக செலவு செய்யவில்லை" என்று பேசியிருந்தார். இப்படி ஓ பன்னீர் செல்வம் திடீரென்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பேசி உள்ளார்.
இந்நிலையில் தான் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான உடுமலை ராதாகிருஷ்ணன், ஓ பன்னீர் செல்வத்துடன் சிரித்தபடி பேசி கொண்டிருந்தார். அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வம் நீக்கப்பட்ட பிறகு அவரிடம் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் தூரத்தை கடைப்பிடித்தனர். ஆனால் இப்போது ஓ பன்னீர் செல்வத்துடன் சட்டசபையிலேயே அதிமுக எம்எல்ஏக்கள் சகஜமாக பேச தொடங்கி உள்ளனர். இதனால் கருத்து வேறுபாடு நீங்கி மீண்டும் ஓ பன்னீர் செல்வம் தரப்பை அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி சேர்க்கிறாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை எடப்பாடி பழனிச்சாமி அதுபற்றி வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை. ஓ பன்னீர் செல்வம் தரப்பு மீண்டும் அதிமுகவில் இணைய ஆர்வம் காட்டி வரும் சூழலில் எடப்பாடிபழனிச்சாமி பிடி கொடுக்காமல் உள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக சட்டசபையில் நடக்கும் சம்பவங்கள் என்பது ஓ பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் இடையேயோன நெருக்கத்தை காட்டும் வகையில் உள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை மீண்டும் அதிமுகவில் சேர்த்து கொள்கிறாரா? என்பது இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications