திடீரென ரஜினிகாந்தை சந்தித்த ஓ பன்னீர் செல்வம்.. போயஸ் கார்டன் இல்லத்தில் இரவில் நடந்த மீட்டிங்
சென்னை: சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள இல்லத்துக்கு சென்று நடிகர் ரஜினிகாந்தை இன்று இரவு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் பின்னணி குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்தார்.

இந்நிலையில் தான் வரும் சட்டசபை தேர்தலில் பாஜக மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் பாஜக கூட்டணியில் இருந்து ஓ பன்னீர் செல்வம் விலகி உள்ளார்.
இந்நிலையில் தான் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்துக்கு இன்று ஓ பன்னீர் செல்வம் திடீரென்று சென்றார். ஓ பன்னீர் செல்வத்தை ரஜினிகாந்த் வரவேற்றார். அங்கு அவர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ஓ பன்னீர் செல்வம் உடன் அவரது மகனும், முன்னாள் எம்பியுமான ஓபி ரவீந்திரநாத் இருந்தார்.
ஓ பன்னீர் செல்வம் மரியாதை நிமித்தமாக சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் உள்பட பிற விஷயங்கள் பற்றி ஏதேனும் பேசப்பட்டதா? என்பது பற்றி உடனடியாக தெரியவில்லை. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓ பன்னீர் செல்வம் திடீரென்று ரஜினிகாந்தை சந்தித்து இருப்பது கவனம் பெற்றுள்ளது. ஏனென்றால் ரஜினிகாந்த் பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.
இதனால் ஓ பன்னீர் செல்வம், ரஜினிகாந்தை திடீரென சந்தித்து இருப்பதன் பின்னணியில் அரசியல் ஏதேனும் உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ஓ பன்னீர் செல்வம் தற்போது அதிமுக, பாஜக கூட்டணியில் இல்லை. அவர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் அவர் இயங்கி வருகிறார்.
தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க உள்ளதாக அவர் கூறினார். அது நடக்கவில்லை. அதேபோல் சசிகலா மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டவர்களை சந்தித்து பேசுவதாக கூறினார். அதுவும் இன்னும் நடக்கவில்லை.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு அதிகபட்சமாக இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், விஜயின் தவெக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் பிரசாரங்களை தீவிரமாக தொடங்கி உள்ளன. ஆனால் ஓ பன்னீர் செல்வம் இன்னும் அமைதியாகவே இருக்கிறார்.
அரசியல் களத்தின் அடுத்த பாய்ச்சலை அவர் தொடங்கவில்லை. இதனால் ஓ பன்னீர் செல்வம் என்ன செய்ய போகிறார்? என்று அவரது ஆதரவாளர்களும், தொண்டர்களும் எதிர்பார்த்து காத்து இருக்கும் நிலையில் நடிகர் ரஜினிகாந்தை திடீரென்று சந்தித்துள்ளார்.












Click it and Unblock the Notifications